உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப பிராத்திப்போம்; நடிகர் சூர்யா பேச்சு
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை ,
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உட்பட பலர் நடித்திருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இன்பா என்ற கதாபாத்திரத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்த படம் இந்த மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் "எதற்கும் துணிந்தவன்" திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:
உக்ரைன் நாட்டில் எதுவும் அறியாத குழந்தைகள், பொதுமக்கள், இந்தியர்கள் என பலர் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். கொரோனா நிறைய விஷயங்களை புரட்டிப் போட்டுள்ளது.
என்னுடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்காகத்தான் இருக்கும். செய்யவேண்டியதை சரியான நேரத்தில் செய்யவேண்டும். அத்துடன் என்ன படம் எடுக்கின்றோமோ, அது மக்களுக்கான படமாகத்தான் இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்து செய்துவருகிறோம்.
அந்த வகையிலேயே இதுவரை யாரும் பேசாத விஷயத்தை ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் பேசியுள்ளோம். ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் ஒரு சிலருக்கு சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டன.
அது தற்காலிக பிரச்னைதான். அதை சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். அந்த பிரச்னையில் என்னுடைய ரசிகர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டன.
அதை இந்த வயதிலும் பக்குவத்துடன் கையாண்டார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு நிறைய உள்ளன. எனவே மாற்றத்திற்கு அனைவரும் தயாராக இருங்கள்.
இவ்வாறு சூர்யா பேசினார்.
இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
சூர்யா திரைப்படத்தில் அம்பேத்கர் , பெரியார் வசனங்கள் இருக்கும் . இனிமேல் அனைவரும் சூர்யாவை புரட்சி நாயகன் என அழையுங்கள்.
நான் நல்ல அப்பாவாக நிறைய படத்தில் நடித்துவிட்டேன் . இதன் காரணமாக நல்ல வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் சினிமாவில் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்.
ஆனால் அந்த கதாபாத்திரம் அமைதிப்படை, காக்கிச்சட்டை, இருபத்தி நான்கு மணி நேரம், நூறாவது நாள் மற்றும் மிஸ்டர் பாரத் படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை விட சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் மீண்டும் வில்லனாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story