வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - பாக்கியராஜ் விளக்கம்
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவில் வாக்கு எண்ணிக்கையை நடத்த தடையில்லை என உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று கூறிய பதிவான வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருப்பதாக சங்கரதாஸ் அணியினர் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஐசரி கணேஷ் தரப்பினர் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சங்கதேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில் சங்கரதாஸ் அணியினர் மொத்தமாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் கே. பாக்கியராஜ் கூறியதாவது, வாக்கு வித்தியாசம் அதிகமாக இருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரிவர பதில் எதுவும் சொல்லவில்லை. மேலும் நாங்கள் கீழே பேசிக்கொண்டு இருக்கும் போதே மேலே வாக்கு எண்ணிக்கையை தொடங்கிவிட்டனர்.
கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், நாங்கள் கீழே நின்று கொண்டிருக்கும் போதே வாக்கு எண்ணிக்கையையும் தொடங்கி விட்ட பிறகு நாங்கள் அங்கு இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் வெளியேறி விட்டோம் என்று கூறினார்.
இது குறித்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் கூறியதாது, இரு அணிகளில் எந்த அணி வந்தாலும் ஓகே, ஆனால் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை என்பதை அவர்கள் சொல்ல தாமதமானது. மொத்தம் பதிவான வாக்குகள் 1602, எல்லா பெட்டிகளையும் திறந்த அதிகாரிகள் ஒரு பெட்டியை மட்டும் திறக்க தாமதம் செய்தார்கள். கேட்டால் சாவி தொலைந்து விட்டது என்றார்கள்.
அதில்தான் எல்லா ரெகார்டுகளும் இருகின்றன. பிறகு பதிவான வாக்குகள் குறித்து அறிவிக்கப்பட்டது. பல பதவிகளுக்கு பதிவான வாக்குகள் 7,8 என்று அதிகமாக இருக்கின்றன, எப்படி அதிகமாகும். எது எப்படியோ இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தே ஆகவேண்டும். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார்.
Related Tags :
Next Story