நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 20 March 2022 4:58 PM IST (Updated: 20 March 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சங்க தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில்  கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.  மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். 

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு  வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளார். 

பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் சங்க தலைவர் தேர்தலில் நாசர் வெற்றி பெற்றுள்ளார். நாசர்  1,701 வாக்குகளும், பாக்யராஜ்  1,054 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது. 


Next Story