புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது 182 கிலோ வெள்ளி-16 பவுன் தங்க நகைகள் பறிமுதல்


புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது 182 கிலோ வெள்ளி-16 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:29 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது 182 கிலோ வெள்ளி-16 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் 182 கிலோ வெள்ளி மற்றும் 16 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

5 கொள்ளையர்கள் கைது

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 182 கிலோ வெள்ளி மற்றும் 16 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு எல்லைக்கு உட்பட்ட திருமயம், நமணசமுத்திரம், அரிமளம், பனையப்பட்டி, கே.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மனோகர், முகமதுஇத்ரீஸ் ஆகியோர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

பல்வேறு கொள்ளை சம்பவங்களில்...

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு எல்லைக்கு உட்பட்ட திருமயம், நமணசமுத்திரம், அரிமளம், கே.புதுப்பட்டி, பனையப்பட்டி, மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சிவகங்கை மாவட்டம் கொத்தமங்களம் கீழ குடியிருப்பு பகுதியை சேர்ந்த செங்கான் என்ற செங்கமலத்தை (வயது 48) போலீசார் கைது செய்தனர்.

செங்கமலத்திடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நல்லையா(32), அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற பச்சி ராஜா(50), உத்தமன் மகன் கருப்பையா(27), சிவகங்கை மாவட்டம் பழையூர் மகடியாப்பட்டியை சேர்ந்த அழகப்பன்(38) ஆகியோர் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருட்டு பொருட்களை வாங்கியவர்கள் கைது

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நல்லையா, ராஜா, கருப்பையா, அழகப்பன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் இருந்து 182 கிலோ வெள்ளி மற்றும் 16 பவுன் தங்க நகைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து இந்த திருட்டு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்த முத்துப்பாண்டியன்(37), காரைக்குடி வெள்ளக்குண்டார் வீதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற ராஜா சேட் (38) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 5 கொள்ளையர்களும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 கொள்ளை சம்பவங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் 5 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் 75 சதவீதம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story