விக்கிரமங்கலம் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 11 பேருக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் சிகிச்சை


விக்கிரமங்கலம் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 11 பேருக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:30 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 11 பேருக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் சிகிச்சை

விக்கிரமங்கலம்,

விக்கிரமங்கலம் அருகே சத்துணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள் மயக்கம்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குணமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக (சத்துணவு) சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.

அப்போது ஒரு மாணவன் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் பல்லி கிடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த சத்துணவு அமைப்பாளர் உடனடியாக மாணவர்கள் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாற்று உணவு வழங்கப்பட்டு மாணவர்கள் சாப்பிட்டனர்.

பின்னர் வழக்கம்போல் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் பாடம் படித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சில மாணவ, மாணவிகள் வாந்தி-மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் வாந்தி எடுத்து கொண்டிருந்த சதீஷ், அகினேஷ் (வயது10), மாரிமுத்து (10), குமரன், பிரியதர்ஷினி (10), நித்யா (10), ஆஷா (10), சுகன்யா, விகுவன், பிரசாந்த், ஆதித்யா ஆகிய மாணவ, மாணவிகளை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்த வந்தனர். அப்போது அவர்களிடம் மாணவர்கள் நலமுடன் இருப்பதாகவும், பயப்பட வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் கூறி ஆசுவாசப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து பெற்றோர்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று தங்களது குழந்தைகளை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்வி அதிகாரிகளும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story