ஜெயலலிதா மறைவை தாங்கி கொள்ள முடியாமல் அ.தி.மு.க. பெண் தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் விஷம் குடித்து சாவு


ஜெயலலிதா மறைவை தாங்கி கொள்ள முடியாமல் அ.தி.மு.க. பெண் தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மறைவை தாங்கி கொள்ள முடியாமல் அ.தி.மு.க. பெண் தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் விஷம் குடித்து சாவு

குன்னம்,

ஜெயலலிதா மறைவை தாங்கி கொள்ள முடியாமல் குன்னம் அருகே அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தையும் விஷம் குடித்து இறந்தார்.

பெண் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுதுரை. அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(வயது 35). அ.தி.மு.க.உறுப்பினர். ஜெயலலிதா மீதும் அதிக பற்றும், பாசமும் கொண்ட இவர், ஜெயலலிதா மறைந்த நாள் முதல் மிகவும் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் 16-ம் நாள் நிகழ்ச்சிகளை நேற்று தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா மிகவும் வேதனை அடைந்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர், வீட்டில் இருந்து எழுந்து தனது வயலுக்கு சென்று அங்குள்ள மரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெண்ணிலாவை காப்பாற்றி அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தந்தையும் விஷம் குடித்து சாவு

இதுகுறித்து தகவல் அறிந்து அரியலூர் மருத்துவமனைக்கு வந்த வெண்ணிலாவின் தந்தை கந்தசாமி(65) மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். மகள் இறந்த துக்கம் தாளாமல் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வெண்ணிலாவின் தாய் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர், தற்கொலை செய்து கொண்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நேரத்தில் தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்து கொண்ட வெண்ணிலாவுக்கு பிரியதர்ஷினி(14), சிந்துமதி(12) ஆகிய 2 மகள்களும், தனுஷ்(9) என்கிற மகனும் உள்ளனர்.

Next Story