வாலிபர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆயுள் தண்டனை பெண் உள்பட 12 பேருக்கு 7 ஆண்டு சிறை


வாலிபர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆயுள் தண்டனை பெண் உள்பட 12 பேருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 21 Dec 2016 4:45 AM IST (Updated: 21 Dec 2016 2:34 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆயுள் தண்டனை பெண் உள்பட 12 பேருக்கு 7 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி,

வாலிபர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவி உள்பட 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பெலவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் அமாவாசை(வயது 53). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி கவுரி(40). இவர்களின் மகள் ரம்யா. இவரும், அதே ஊரை சேர்ந்த முனியப்பன் மகன் ராஜீவ்காந்தி(23) என்பவரும் காதலித்து வந்தனர். இதை அறிந்த அமாவாசை, தனது மனைவி கவுரியின் தம்பி அன்புவிற்கு, தனது மகள் ரம்யாவை திருமணம் செய்து வைத்தார்.

இது குறித்த தகவல் பெங்களூருவில் உள்ள ஒரு இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்த ராஜீவ்காந்திக்கு தெரிந்தது. இதையடுத்து அவர் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி தனது நண்பர்களான கோபி, மோகன் ஆகியோருடன் அமாவாசை வீட்டிற்கு சென்று, எப்படி நான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கலாம்? என கேட்டு தகராறு செய்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

வாலிபர் கொலை

இதையடுத்து பெங்களூரு சென்ற ராஜீவ்காந்தி, 5 நாட்கள் கழித்து, 14-ந் தேதி இரவு மீண்டும் பெலவர்த்திக்கு வந்தார். அப்போது அங்கிருந்த அமாவாசை, ராஜீவ்காந்தியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து அதே பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கதிர் அடிக்கும் களத்திற்கு அழைத்து சென்று, அங்கு அவரை கட்டி வைத்தார். பிறகு அமாவாசை, அவரது மனைவி கவுரி, உறவினர்களான அதே ஊரை சேர்ந்த செல்வம்(45), சென்னகிருஷ்ணன்(34), ரமேஷ்(38), வடிவேல்(34), முனுசாமி(50), ராக்கப்பன்(45), முருகன்(50), அமிர்தன்(51), ஆந்திரகாரி என்கிற முனியம்மாள்(51), சந்திரா(40), சுப்பிரமணி(40) மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய 14 பேர் கைகளாலும், கட்டையாலும், இரும்பு கம்பியாலும் ராஜீவ்காந்தியை தாக்கினார்கள். இதில் மயங்கி விழுந்த அவரை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராஜீவ்காந்தி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி ராஜீவ்காந்தி பரிதாபமாக இறந்தார்.

தீர்ப்பு

இது குறித்து அப்போதைய மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்குப்பதிவு செய்து, அமாவாசை உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி முதலாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி மாவிஸ் தீபிகா சுந்தரவதனம் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான அமாவாசைக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவி கவுரி உள்பட 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 வயது சிறுவன் தற்போது 17 வயது நிரம்பிய நிலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கதிரேசன் ஆஜரானார்.

தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரையும் மகராஜகடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த தீர்ப்பு காரணமாக கிருஷ்ணகிரி கோர்ட்டு வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story