வங்கிகளின் தானியங்கி டெபாசிட் எந்திரங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன


வங்கிகளின் தானியங்கி டெபாசிட் எந்திரங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:34 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளின் தானியங்கி டெபாசிட் எந்திரங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வங்கிகளின் தானியங்கி டெபாசிட் எந்திரங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

வங்கிகளில் கூட்டம்


ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நாளில் இருந்து வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவுவதாலும், உச்சவரம்புத்தொகைக்கு மேல் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாலும் மக்கள் தங்களுக்கு தேவையான பணம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். ஒருசில வங்கிகளில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கிடைப்பதில்லை. ஒருசில வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ஒரு வாரத்துக்குரிய உச்சவரம்புத்தொகை ஒரே நாளில் கிடைத்துவிடுகிறது. ஏ.டி.எம்.களிலும் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கிடைப்பதில்லை. இதனால் வங்கிகளின் வேலை நாட்களிலும், ஏ.டி.எம்.களிலும் தொடர்ந்து கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

நீண்ட வரிசை


இதேபோல் நேற்றும் நாகர்கோவில் நகரில் உள்ள பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் கூட்டம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா நெருங்கி வருவதால் இந்த கூட்டம் இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் உள்ள வங்கிகளில் பலவற்றில் நீண்ட வரிசையை காண முடிந்தது.

குளச்சல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் கூட்டம் அலைமோதியதால் வங்கிக்கு உள்ளே இருந்து மெயின்ரோடு வரை நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் காத்திருந்து பணம் எடுத்தனர்.

ஏ.டி.எம்.களைப் பொறுத்தவரையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஏ.டி.எம்.களில் நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட வரிசையில் நின்று மக்கள் பணம் எடுத்துச் சென்றனர். பல ஏ.டி.எம்.கள் நேற்றும் பூட்டியே கிடந்தன.

புதிய நிபந்தனை


செல்லாது என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்தது. இதையடுத்து டிசம்பர் மாதம் 31–ந் தேதி வரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை ஒன்றை விதித்து வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் செல்லாத ரூபாய் நோட்டுகளை 5 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் அதனை அவரவர் கணக்கில் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் வந்தால் சம்பந்தப்பட்ட நபர் ஏன் இதுவரை டெபாசிட் செய்யாமல் இருந்தார்? இந்த பணத்துக்கான ஆதாரம்? கணக்கில் காட்டப்பட்ட வருமானமா? என்பன போன்ற விவரங்களை வங்கி மேலாளரும், பிற 2 அதிகாரிகளும் சேர்ந்து விசாரணை நடத்தி, டெபாசிட் செய்ய வந்தவரிடம் விளக்கம் எழுதி வாங்க வேண்டும். விசாரணையில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து நிரந்தர பான்கார்டு, ஆதார் கார்டு ஜெராக்ஸ் இணைத்து டெபாசிட் செய்ய வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக புதிய படிவம் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இது செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு குறைவான தொகையில்தான் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட்டுக்கு வருவதாக தெரிவித்தனர்.

எந்திரங்களின் செயல்பாடு நிறுத்தம்


மேலும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் உள்ள தானியங்கி டெபாசிட் எந்திரத்தில் யாரும் டெபாசிட் செய்யாமல் இருப்பதற்காக அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி டெபாசிட் எந்திரங்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நேற்று தானியங்கி டெபாசிட் எந்திரத்தில் டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தபால் நிலையங்கள்


தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று சேமிப்பு கணக்குதாரர்களுக்கு சேமிப்பு கணக்குதாரர்கள் கேட்கும் தொகை வழங்கப்படுகிறது.

தபால் நிலையங்களிலும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் செல்லாத ரூபாய் நோட்டுகள் வந்தால் அதற்குரிய விளக்கம் அளித்தபிறகுதான் டெபாசிட் செய்ய ஏற்றுக்கொள்ளப்படும் என்று தபால்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story