வார்தா புயல் மழையில் கோட்டைக்குள் உள்ள ஆங்கிலேயர் காலத்து கிளைச்சிறை சுற்றுச்சுவர் இடிந்தது


வார்தா புயல் மழையில் கோட்டைக்குள் உள்ள ஆங்கிலேயர் காலத்து கிளைச்சிறை சுற்றுச்சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 22 Dec 2016 2:15 AM IST (Updated: 21 Dec 2016 8:06 PM IST)
t-max-icont-min-icon

வார்தா புயல் மழையில் வேலூர் கோட்டைக்குள் இருக்கும் ஆங்கிலேயர் காலத்து கிளைச்சிறையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வேலூர் கோட்டை வேலூரை வரலாற்றில் இடம் பெறச் செய்தது வேலூர் கோட்டை. இந்த கோட்டை சுற்றுச்சுவர் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளத

வேலூர்,

வார்தா புயல் மழையில் வேலூர் கோட்டைக்குள் இருக்கும் ஆங்கிலேயர் காலத்து கிளைச்சிறையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

வேலூர் கோட்டை

வேலூரை வரலாற்றில் இடம் பெறச் செய்தது வேலூர் கோட்டை. இந்த கோட்டை சுற்றுச்சுவர் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டைக்குள் ஆங்கிலேயர்கள் காலத்தில் செயல்பட்ட பல்வேறு அலுவலக கட்டிடங்கள், மசூதி, கிறிஸ்தவ ஆலயம், கோவில் என பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இங்கு தற்போதும் சில அலுவலகங்கள், போலீஸ் பயிற்சி பள்ளி இயங்கி வருகின்றன.

இங்கு மதில்சுவர் மட்டுமின்றி அதற்கு உள்பகுதியிலும் பழைய காலத்து முறைப்படி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும் உள்ளன. ஆனால் பராமரிப்பு இல்லாததால் இந்த சுவர்கள் மீது செடி, கொடிகள் மட்டுமின்றி பெரிய, பெரிய மரங்களும் வளர்ந்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

கிளைச்சிறை சுவர் இடிந்தது

இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட வார்தா புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. குடிசை வீடுகளும் இடிந்தன. இந்த வார்தா புயல் வேலூர் கோட்டையையும் விட்டுவைக்கவில்லை.

வேலூர் கோட்டையின் தெற்கு பகுதியில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவருக்கு உள்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்டு வந்த கிளைச்சிறை கட்டிடம் இன்னும் இருக்கிறது. இந்த கிளைச்சிறை வெளியே தெரியாத வகையில் அதன்மீது செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து கிடக்கிறது. இந்த கிளைச்சிறையை சுற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்ட மற்றொரு சுற்றுச்சுவரும் உள்ளது. இந்த சுவரில் பெரியமரங்கள் வளர்ந்திருந்தது. இதன் காரணமாக சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வார்தா புயல் காரணமாக மரங்கள் சாய்ந்தன. அதோடு சுவரும் இடிந்து விழுந்தது. அது தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 50 அடி நீளத்திற்கு இந்த சுவர் இடிந்து கிடக்கிறது. இது யாருடைய கண்ணிலும் படாத இடமாக இருப்பதால் இடிந்த சுவர் இன்னும் அப்படியே கிடக்கிறது. சாய்ந்த மரங்கள் கூட அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.


Next Story