வேலூர் மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க பிரமாண்ட வணிக வளாகம் கட்ட 4 இடங்கள் தேர்வு ‘மாடல் சிட்டி’ கருத்து கேட்பு கூட்டத்தில் கமிஷனர் தகவல்
வேலூர் மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க பிரமாண்ட வணிக வளாகம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்காக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ‘மாடல் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் கமிஷனர் குமார் தெரிவித்தார். கருத்து கேட்ப
வேலூர்,
வேலூர் மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க பிரமாண்ட வணிக வளாகம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்காக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ‘மாடல் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் கமிஷனர் குமார் தெரிவித்தார்.
கருத்து கேட்பு கூட்டம்வேலூர் மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு உலக வங்கி திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர், ஈரோடு மற்றும் ஒசூர் ஆகிய 3 நகரங்கள் ‘மாடல்சிட்டி’ (மாதிரி நகரம்) திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மாடல்சிட்டி திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
மாடல் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நகரின் வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்ப உலக வங்கி 5 ஆண்டுகள் நிதியுதவி வழங்கும். வருவாயை அதிகரிக்க நகரில் என்னென்ன செய்யவேண்டும், அதை எங்கு செய்யவேண்டும் என்பது குறித்து கருத்து கேட்கும் கூட்டம் வேலூர் மாநகராட்சியில் நேற்று நடந்தது.
நகராட்சி ஆணையாளர் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொறியாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு மாடல்சிட்டி திட்டம் குறித்து ஆணையாளர் குமார் விளக்கி பேசியதாவது:–
ரூ.150 கோடி கிடைக்கும்மாடல் சிட்டி திட்டத்தில் வேலூர், ஈரோடு, ஒசூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நகரின் வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வருமானத்தை அதிகரித்தால் அதே தொகையை உலக வங்கி 5 ஆண்டுகள் வழங்கும். இதன் மூலம் ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடி வரை கிடைக்கும்.
இதனால் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நாம் அரசு நிதியை எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. எனவே, வருவாயை பெருக்குவதற்கு ஏற்ற இடமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக சத்துவாச்சாரி, அண்ணாநகர், வேலப்பாடி, காந்திநகர் ஆகிய 4 இடங்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு பிரமாண்ட வணிகவளாகம் கட்டவேண்டும்.
எந்த இடத்தில் பிரமாண்ட வணிகவளாகம் கட்டினால் வருமானம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் கருத்தை தெரிவிக்கத் தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு வணிகர்கள், தன்னார்வலர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.