பள்ளி மாணவியை கடித்ததால் தெருநாயை பிடித்து மரத்தில் கட்டிப்போட்ட பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


பள்ளி மாணவியை கடித்ததால் தெருநாயை பிடித்து மரத்தில் கட்டிப்போட்ட பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2016 2:30 AM IST (Updated: 21 Dec 2016 8:06 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை தெருநாய் கடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாயை பிடித்து மரத்தில் கட்டிப்போட்டனர். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெருநாய்கள் தொல்லை வேலூர் மாநகரம் வளர்ந்த

வேலூர்,

பள்ளி மாணவியை தெருநாய் கடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாயை பிடித்து மரத்தில் கட்டிப்போட்டனர். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் தொல்லை

வேலூர் மாநகரம் வளர்ந்து வரும் மாநகரமாக திகழ்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. வேலூர் மாநகர பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. தெருநாய்கள் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் மாணவ– மாணவிகளையும் தெருநாய்கள் விட்டு வைப்பதில்லை. நாய்களுக்கு வரும் ‘ரேபிஸ்’ என்னும் வெறிநோய், நாய்கள் கடிக்கும்போது நாயின் எச்சில் மூலமாக மனிதர்களையும் பாதிக்கிறது.

இந்த நோயை தடுக்க நாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். வீடுகளில் பலர் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் நாய்களுக்கு சிலர் இந்தத் தடுப்பூசியை போடுகின்றனர். ஆனால், வீதிகளில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுவதில்லை. தடுப்பூசி போடாத நாய்கள் கடித்தால் ரேபிஸ் நோய் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது.

நாயை கட்டிப்போட்ட பொதுமக்கள்

வேலூர் வள்ளலார் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அதில் ஒரு நாய் 19–வது வார்டு பகுதியில் கடந்த 2 மாதங்களில் 7–க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த நாயை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து நேதாஜி முதல் தெருவில் உள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

இந்த நாய் பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும். திடீரென ஆக்ரோஷமாக சாலையில் செல்பவர்களை கடித்து விடும். இன்றைக்கு (அதாவது நேற்று) காலையில் 6–ம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவி சென்றபோது, அந்த மாணவியை நாய் கடித்துக் குதறியது. மாணவியை போன்று மளிகைக்கடைக்காரர் சேகர், ஓய்வுபெற்ற மின்சாரத்துறை ஊழியர் துரை உள்பட பலரை கடித்துள்ளது. எனவே இந்த நாயை பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். ஆனால், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்க வரவில்லை. தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story