பவானியில் டிரைவரை கொலை செய்த தொழிலாளி நண்பருடன் கைது அண்ணனை கொன்றதால் தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம்
பவானியில் டிரைவரை கொலை செய்த வழக்கில் நண்பருடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அண்ணனை கொன்றதால் தீர்த்துக்கட்டியதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சரக்கு ஆட்டோ டிரைவர் ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் 4–வது வீதியை சேர்ந்தவர் சீனிவாசன்.
பவானி
பவானியில் டிரைவரை கொலை செய்த வழக்கில் நண்பருடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அண்ணனை கொன்றதால் தீர்த்துக்கட்டியதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சரக்கு ஆட்டோ டிரைவர்ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் 4–வது வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சசி என்கிற சசிக்குமார் (வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், டிஷால் (3) என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19–ந் தேதி பவானி வர்ணபுரத்தை சேர்ந்த முத்துசாமியின் மகன் கார்த்திக்கை கொலை செய்ததாக சசிக்குமாரையும், அவருடைய நண்பர் அன்பையும் பவானி போலீசார் கைது செய்தனர்.
கார்த்திக்கை கொலை செய்த சசியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற ஆவேசத்தில் அவருடைய தம்பி சந்திரன் என்கிற சந்திரசேகர் (30) இருந்து வந்தார். சந்திரன் மீது பவானி போலீஸ் நிலையத்தில் 3 வழிப்பறி வழக்குகள், ஒரு கொலை மிரட்டல் என மொத்தம் 4 குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் சந்திரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கொலைகடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சந்திரன், மீண்டும் சசியை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிஅளவில் சந்திரனும், அவருடைய நண்பரான பவானி செங்காடு பகுதியை சேர்ந்த வேலுசாமியின் மகன் பிரகாஷ் (26) என்பவரும் சேர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு மது வாங்குவதற்காக சசியும் டாஸ்மாக் கடைக்கு வந்தார். அவரை கண்டதும் சந்திரன், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சசியை சரமாரியாக குத்தினார். இதில் சசி என்கிற சசிக்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
நண்பருடன் தொழிலாளி கைதுஇதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசியை கொலை செய்த சந்திரனையும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் பிரகாசையும் வலைவீசி தேடி வந்தனர். அவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்–இன்ஸ்பெக்டர்கள் வேல்முத்து, நந்தீஸ்வரன், நேசாக், சீரங்கன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஈரோடு புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சந்திரனும், பிரகாசும் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சந்திரன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்கைதான சந்திரன் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
எனது அண்ணன் கார்த்திக்கை சசி என்பவர் அவருடைய நண்பர் அன்புவுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டார். இதனால் எனது அண்ணனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக சசியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியில் இருந்து வந்தேன். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக நான் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தேன். இதனால் விடுதலையாகி வந்ததும் சசியை கொல்ல வேண்டும் என்று பலமுறை திட்டம் தீட்டினேன்.
இந்தநிலையில் நான் எனது நண்பர் பிரகாஷ் உடன் டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டு இருந்தேன். அப்போது சசி தனியாக டாஸ்மாக் கடைக்கு வந்தார். அவர் ஏற்கனவே குடிபோதையில் இருந்ததை நான் அறிந்து கொண்டேன். இதனால் நான் சசியை கத்தியால் சரமாரியாக குத்தினேன். அப்போது என்னை பொதுமக்கள் சிலர் தடுக்க முயன்றனர். எனவே அவர்களை தடுக்க விடாமல் எனது நண்பர் பிரகாஷ் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினார். அதன்பின்னர் நாங்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டோம். அதன் பிறகு சசி இறந்து விட்டதை அறிந்துகொண்டோம். இதில் தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு சந்திரன் அந்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.