கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது 500 அடி பள்ளத்தில் கார் உருண்டு டிரைவர் பலி


கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது 500 அடி பள்ளத்தில் கார் உருண்டு டிரைவர் பலி
x
தினத்தந்தி 22 Dec 2016 3:30 AM IST (Updated: 22 Dec 2016 12:53 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது 500 அடி பள்ளத்தில் கார் உருண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– சுற்றுலா சென்றனர் மதுரை புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந

கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது 500 அடி பள்ளத்தில் கார் உருண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சுற்றுலா சென்றனர்

மதுரை புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). இவர் தனது நண்பர்களான கோரிப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன் (25), சுரேஷ்குமார் (35), ராஜா (35), பி.பி.குளத்தை சேர்ந்த செல்லத்துரை (33) ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். செல்லத்துரை டிரைவர் ஆவார்.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்த அவர்கள் நேற்று அதிகாலை வேளையில் மதுரைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை ஹரிஹரன் ஓட்டினார். அதிகாலை நேரம் என்பதால் மலைச்சாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை சரிவர தெரியவில்லை.

500 அடி பள்ளத்தில் உருண்டது

எனவே அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. ஹரிஹரனும் காரின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே காரை ஓட்டிக்கொண்டிருந்தார். மயிலாடும்பாறை அருகே சென்றபோது, அங்குள்ள ஒரு வளைவில் காரை ஹரிஹரன் திருப்ப முயன்றார். அப்போது அங்குள்ள தடுப்புச்சுவரை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கார் தடுப்புச்சுவரில் மோதி சுமார் 500 அடி பள்ளத்தில் ‘மடமட’வென உருண்டு விழுந்தது.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட வாகன ஓட்டிகள் சிலர் கொடைக்கானல் தீயணைப்பு நிலையம், போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

கயிறு கட்டி மீட்டனர்

தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இதையடுத்து கயிறு கட்டி இறங்கி அவர்களை மீட்க முடிவு செய்தனர். இதற்கிடையே கொடைக்கானல் போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள், தீயணைப்பு படையினருடன் சேர்ந்து சுமார் 2 மணி நேரம் போராடி காயம் அடைந்த 4 பேரையும் மீட்டனர்.

பின்னர் அவர்களை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த செல்லத்துரையின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து பள்ளத்தில் தவித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் பேசினர். அப்போது, கொடைக்கானல் பகுதியில் விபத்தில் சிக்குபவர்களை மீட்க தூக்குப்படுக்கை (ஸ்டிரெச்சர்) வசதி இல்லை. அதனை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.


Next Story