பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் ‘சுவைப்’ கருவியை பயன்படுத்தி தொலைபேசி கட்டணம் செலுத்தும் வசதி
பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பண பரிவர்த்தனை எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே வங்கிகளுக்கு போதி
கூடலூர்
பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பண பரிவர்த்தனை எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனைகடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே வங்கிகளுக்கு போதிய பணம் வழங்கப்படாமல் உள்ளதால் ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடக்கிறது. இதேபோல் பணம் எடுப்பதற்காக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வங்கிகளின் வாசல்களில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கருப்பு பண பதுக்கலை தடுக்கவும், ஊழலை கட்டுப்படுத்தவும் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டும் என நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்போன் மூலம் வங்கி சேவையை பெறவும், பண பரிவர்த்தனை செய்யவும் மக்களிடையே வலியுறுத்தப்பட்டு வருகிறது.
‘சுவைப்’ எந்திரங்கள்இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் அனைத்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்களிலும் பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி கட்டணம் வசூலிக்க ‘சுவைப்’ என அழைக்கப்படும் பண பரிவர்த்தனை எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் நேற்று முதல் சுவைப் எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தொலைபேசி கட்டணங்களை சுவைப் எந்திரங்கள் மூலம் செலுத்தலாம் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் கூறும்போது, கடந்த காலங்களில் தொலைபேசி கட்டணம் ரொக்கமாக பெறப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருந்து வந்தது.
தற்போது பண பரிவர்த்தனை எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம்.கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மூலம் தொலைபேசி கட்டணங்களை சில நிமிடங்களில் செலுத்தி விடலாம். இதற்காக ரசீதும் வழங்கப்படுகிறது. எனவே தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்காக ஏ.டி.எம். மையங்கள் முன்பு பணம் எடுக்க காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.