தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறத
கோவை
வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகோவையை அடுத்த சூலூர் பகுதியில் வைரம் பட்டை தீட்டும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 300–க்கும் மேலான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிற்சாலையை நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு இடமாற்றம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் சூலூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை கடந்த 7–ந்தேதி மூடப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
அப்போது, தொழிலாளர் துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் உறுதி அளித்து இருந்தார். இதன்படி தொழிலாளர்துறை அதிகாரி லட்சுமிநாராயணன் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் பத்மநாபன், செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் தொழிலாளர்கள் தரப்பிலும், வைர தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் தலைமை மேலாளர் பாஸ்கரன் உள்பட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டம்பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கும்போது, தொழிற்சாலையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வற்புறுத்தி ஏராளமான பெண்கள், தொழிலாளர்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்தின் முதல் மாடியில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலை நீடித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது, தொழிற்சாலையின் நிர்வாகத்துக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை இருப்பதாக கூறி தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த லலிதா(வயது27) என்ற பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அந்த பெண்ணை 108 ஆம்புலன்சு வேனில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். தற்போது லலிதா குணம் அடைந்து வருகிறார்.
இந்தநிலையில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி தமிழரசி முன்னிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 27–ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொழிலாளர்கள் ஏற்க வில்லை. மேலும் மாவட்ட கலெக்டரும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியும் உறுதியான முடிவை அறிவிக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி தொழிலாளர்துறை அலுவலகத்தில் பெண்கள் இரவு வரை உட்கார்ந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மீண்டும் பேச்சுவார்த்தைஇதைத்தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ரேஸ்கோர்சில் உள்ள கலெக்டர் ஹரிகரனின் முகாம் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.