காரமடை ரெயில்வே மேம்பால பணிகள் மே மாதம் நிறைவடையும் அதிகாரி தகவல்


காரமடை ரெயில்வே மேம்பால பணிகள் மே மாதம் நிறைவடையும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:30 AM IST (Updated: 22 Dec 2016 1:09 AM IST)
t-max-icont-min-icon

காரமடை ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் மே மாதம் நிறைவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரெயில்வே மேம்பாலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில்களும் த

மேட்டுப்பாளையம்

காரமடை ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் மே மாதம் நிறைவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரெயில்வே மேம்பாலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில்களும் தினந்தோறும் காரமடை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் காரமடை உள்ளது.

காமடையில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல மேம்பாலமோ, பாதசாரிகள் நடந்து செல்ல சுரங்க பாதையோ இல்லை. இதனால் காரமடை வழியாக ரெயில்கள் செல்லும்போது, ரெயில்வே கேட் மூடப்படுவதால், ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களுக்கும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் காரமடையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டு, திட்ட மதிப்பீட்டு அறிக்கையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் ரெயில்வே திட்டப்பணிகள் திட்டத்தின் கீழ் காரமடையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.33 கோடியே 77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியது. இதில் ரெயில்வே மேம்பாலத்திற்கு ரூ.13 கோடி, சாக்கடை கால்வாய் மற்றும் சேவை சாலை பணிகளும் அடங்கும். நில ஆர்ஜிதத்திற்கு ரூ.8 கோடி, மாற்றுப்பாதை அமைப்பதற்கு ரூ.5½ கோடி என பல்வேறு பகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

சேவை சாலை

காரமடையில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கோவைக்கு வரும் சாலையில் மேம்பாலத்துக்காக 6 தூண்களும், மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் சாலையில் 10 தூண்களும் அமைக்கும் பணி முழுவதும் நிறைவடைந்து விட்டது. சின்னமத்தம்பாளையத்தில் இருந்து பெள்ளாதி மாரியம்மன் கோவில் வரை ரூ.5½ கோடி செலவில் 7.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5½ மீட்டர் அகலத்தில் மாற்றுப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. அதேபோல் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 400 மீட்டர் தூரத்திற்கும், கோவை பக்கம் 300 மீட்டர் தூரத்திற்கும் சேவை சாலை அமைக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இந்தநிலையில் ரெயில்வே தண்டவாளத்துக்கு மேல் ரெயில்வேத்துறை சார்பில், 32 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு, இருபுறமும் கைப்பிடிச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் அருகில் 17 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதையில் படிக்கட்டுகள் அமைத்தால் பாதசாரிகள் மற்றும் வயதானவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படக்கூடிய சூழ்நிலை காணப்படும். இதனை கருத்தில் கொண்டு படிக்கட்டுக்கு பதிலாக சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மே மாதத்தில் முடிவடைந்துவிடும்

நெடுஞ்சாலை திட்டங்கள் கோவை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் கே.கே.மோகன், கோட்ட பொறியாளர் ரங்கராஜன், உதவி பொறியாளர் முரளீதரன் ஆகியோர் மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேம்பால கட்டுமான பணிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் நில ஆர்ஜிதம் மற்றும் கட்டுமான பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக பணிகள் முடிக்கப்பட வில்லை என தெரிகிறது.

கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு, அந்த வழியே போக்குவரத்தும் நடைபெறாததால் வாகன ஓட்டுனர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேம்பால கட்டுமான பணிகள் வருகிற மே மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story