வங்கியில் பணம் வழங்கப்படாததை கண்டித்து தியாகதுருகம், அனந்தபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வங்கியில் பணம் வழங்கப்படாததை கண்டித்து தியாகதுருகம், அனந்தபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 1:36 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் பணம் வழங்கப்படாததை கண்டித்து தியாகதுருகம் மற்றும் செஞ்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கட்டுப்பாடு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும

தியாகதுருகம்

வங்கியில் பணம் வழங்கப்படாததை கண்டித்து தியாகதுருகம் மற்றும் செஞ்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கட்டுப்பாடு

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதற்கு பதில் புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் எனவும் அறிவித்தது. புதிய ரூபாய் நோட்டுகளை போதுமான அளவுக்கு ரிசர்வ் வங்கி வெளியிடாததால் பொதுமக்களுக்கு தேவையான பணத்தை வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் இருந்து எடுக்க முடியவில்லை. மேலும் பொதுமக்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மத்திய அரசு கடுமையான கட்டுப்பாட்டை விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கும், வங்கிகளுக்கும் பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அதிலும் பணம் பெறமுடியவில்லை. இதன்காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வங்கிகள் முன்பு பொதுமக்கள் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தியாகதுருகத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுப்பதற்காக அப்பகுதி மக்கள் நேற்று காலை 8.30 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து ஒரு சிலருக்கு மட்டும் வங்கியில் இருந்து பணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அங்குள்ள சென்னை–சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், வங்கியில் போதுமான பணம் இல்லாததால் அனைவருக்கும் வழங்க முடியவில்லை. வங்கி அதிகாரிகள் விழுப்புரத்தில் உள்ள வங்கிக்கு சென்று பணம் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன், தங்களுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறி, அவர்களுக்கு பணம் பெறுவதற்கான டோக்கனை போலீசார் வழங்கினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டோக்கன் வாங்கிவிட்டு, ஓரமாக சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அனந்தபுரம்

இதேபோல் செஞ்சி அருகே அனந்தபுரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலும் பொது மக்களுக்கு பணம் வழங்கபடவில்லை. இதை கண்டித்து பொது மக்கள் அங்குள்ள மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்களிடம் போலீசார், வங்கியில் அனைவருக்கும் போதுமான அளவுக்கு பணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொது மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story