கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் எடுக்க எதிர்ப்பு: நீரேற்றும் நிலையத்துக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம்


கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் எடுக்க எதிர்ப்பு: நீரேற்றும் நிலையத்துக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 1:44 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார் கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நீரேற்றும் நிலையத்துக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் ஆறு காட்டுமன்னார்கோவில் அருகே க

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார் கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நீரேற்றும் நிலையத்துக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம் ஆறு

காட்டுமன்னார்கோவில் அருகே குமாரட்சி ஒன்றியத்தில் சுமார் 15 கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளது. சுனாமி தாக்கியதற்கு பின்னர் இந்த கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரின் சுவையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது உவர்ப்பு தன்மையுடன் நிலத்தடி நீர் மறிவிட்டது.

கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத போர் மூலமாக கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து செல்வதால் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீரின் சுவை மேலும் மோசமடைந்து வருகிறது. இதை தடுக்க போர்வேல்கள் மூலம் தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீரேற்றும் நிலையத்தை பூட்டினர்

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்க முன்வரவில்லை. இதனால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் நளன்புத்தூர் கிராமத்தில் சிதம்பரம் நகர் பகுதிக்கு குடிநீர் எடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் திடீரென கிராமத்து மக்கள் நீரேற்றும் நிலையத்துக்குள் இருந்த தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, அந்த அலுவலகத்தை இழுத்து பூட்டி பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை காட்டினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.

விரைவில் தடுப்பணை

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ஊற்றுக்கண் அமைக்கப்பட்டு அதில் ராட்சத குழாய்களை பயன்படுத்தி மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இதை தடுத்தால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகை மாவட்ட பொதுப்பணித்துறையினரால் திட்டம் வடிவமைக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Next Story