நொச்சிக்காட்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்


நொச்சிக்காட்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 1:44 AM IST)
t-max-icont-min-icon

நொச்சிக்காட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் செய்தனர். குடிநீர் பிரச்சினை ஸ்ரீமுஷ்ணம் அருகே கொண்டசமுத்திரம் ஊராட்சியில் உள்ளது நொச்சிக்காடு கிராமம். இங்கு சுமார் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வச

ஸ்ரீமுஷ்ணம்,

நொச்சிக்காட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

குடிநீர் பிரச்சினை

ஸ்ரீமுஷ்ணம் அருகே கொண்டசமுத்திரம் ஊராட்சியில் உள்ளது நொச்சிக்காடு கிராமம். இங்கு சுமார் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊரக வளர்ச்சி துறை மூலம் 2012–13–ம் ஆண்டு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இந்த கிராமத்தில் கட்டப்பட்டது.

இந்த தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு பின்னர் அங்கிருந்த போர்வேல் மோட்டார் பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் நீர் ஏற்றுவதற்கென்று அமைக்கப்பட்ட போர்வேலும் தற்போது செயல்படாமல் போனது. இதனால் மீண்டும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது.

போராட்டம்

இதனால் கிராமத்து மக்கள் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் காலி குடங்களுடன் பழுதடைந்த குடிநீர் தொட்டியின் முன்பு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்வு காண முன்வராத அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர்.

தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்து, அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.


Next Story