தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது


தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசைப்படகு மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில விசைப்படகு மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்

கீழக்கரை

ஏர்வாடி அருகே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசைப்படகு மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில விசைப்படகு மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு, நாட்டுப்படகு மீனவர்களின் கரையோர கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்வளத்தை அள்ளிச்செல்வதோடு, அவர்களின் வலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுவதோடு, மோதல் உருவாகும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஏர்வாடி அருகே இதுபோன்று மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வலைகளை சேதப்படுத்தியதை தொடர்ந்து மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்து கடல்அட்டைகளுடன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி கடல்பகுதியில் மண்டபம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சிலர் ஒரு விசைப்படகில் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் வந்து அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

சிறைபிடிப்பு

இதைக்கண்ட சின்ன ஏர்வாடி நாட்டுப்படகு மீனவர்கள் தங்களின் கடல்பகுதியில் வந்து அத்துமீறி மீன்பிடிப்பதோடு, தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல்வளத்தை அழித்து செல்வதை கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு படகில் விரைந்து சென்று விசைப்படகினை சுற்றி வளைத்து சிறைபிடித்து அதில் ஏறி பார்த்தனர். அப்போது அந்த படகில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல்அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர்கள் கீழக்கரை சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி கீழக்கரை சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் சிவப்பிரகாசம், பாண்டியன், மற்றும் அலுவலர்கள் முருகன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் கடற்கரைக்கு விரைந்து சென்று விசைப்படகை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த சுமார் 150 கிலோ கடல்அட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் படகில் இருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த பக்ருதீன் மகன் சாகுல்ஹமீது(30), செய்யது யூசுப் மகன் அப்துல்காதர்(36), யாசின் மகன் சீனிமதார்(40), சாகுல்ஹமீது மகன் பீர்முகம்மது(23), மைதீன் குப்பை மகன் சாதிக்அலி(21) ஆகிய 5 பேரையும் பிடித்தனர்.

கைது

இவர்களிடம் விசாரணை நடத்திய சுங்கத்துறையினர் கடல்அட்டைகள் மற்றும் 5 மீனவர்கள், விசைப்படகை கீழக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா தலைமையிலான வனத்துறையினர் கடல்அட்டைகளை பறிமுதல் செய்து 5 மீனவர்களையும் கைது செய்தனர். நாட்டுப்படகு மீனவர்களின் கடல்எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு, தடைசெய்யப்பட்ட கடல்அட்டைகளை பிடித்து வந்த விசைப்படகு மீனவர்களை 2–வது முறையாக நாட்டுப்படகு மீனவர்கள் சுற்றுவளைத்து சிறைபிடித்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story