வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்


வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினர். மின்கோப

திருமங்கலம்

வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினர்.

மின்கோபுரத்தில் ஏறி போராட்டம்

மதுரை மாவட்டம் தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் துணைக்கோள்நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வீட்டு வசதிவாரியம் தொடங்கி உள்ளது. நேற்றுமுன்தினம் நிலத்தை கையகப்படுத்த சென்ற போது அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள சென்றனர். அப்போது அங்கு ஏராளமான விவசாயிகள் திரண்டிருந்தனர். தாசில்தார் மலர்விழி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இந்தநிலையில் அங்கிருந்த விவசாயி நவநீதகிருஷ்ணன்(வயது 35) அதிகாரிகளை கண்டித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறுவதற்காக ஓடி சென்றார். அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் மின்கோபுரத்தில் ஏறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கைவிட்டனர்

இந்தநிலையில் அங்கிருந்த பாப்பாத்தி என்ற பெண் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் அவரை தடுத்து மண் எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். இதற்கிடையே இன்னொரு விவசாயி அன்புகுபேந்திரன் என்பவர் மற்றொரு மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்தார். அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் பணியை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்பட்ட பின்னரே வேலையை தொடங்குவோம் என்று கூறினர். இதைதொடர்ந்து மின்கோபுரத்தில் ஏறியவர்கள் கீழே இறங்கினர். அப்போது அன்புகுபேந்திரன் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டம் காரணமாக உச்சப்பட்டி பகுதி பரபரப்பாக இருந்தது.


Next Story