தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கேமரா செல்போன் பயன்படுத்த விதித்த தடையை ரத்து செய்யக்கோரி வழக்கு மின்வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கேமரா செல்போன் பயன்படுத்த விதித்த தடையை ரத்து செய்யக்கோரி வழக்கு மின்வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாளர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரிய வழக்கு குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. செல்போன் பயன்படுத்த தடை தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் என்ஜினீ

மதுரை,

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாளர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரிய வழக்கு குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செல்போன் பயன்படுத்த தடை

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஜெயராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சமீபத்தில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன்பின்பும் அங்கு ஒரு விபத்து நடந்தது. இந்த விபத்துகள் செல்போன்களில் படம் பிடிக்கப்பட்டு, சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, கடந்த 1–ந்தேதி முதல் அந்த வளாகத்தில் என்ஜினீயர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கேமரா செல்போன்கள் பயன்படுத்த தடை விதித்து தலைமை என்ஜினீயர் உத்தரவிட்டார்.

காண்டிராக்டர்கள், காவலாளிகள் மட்டும் கேமரா செல்போன்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு அடிக்கடி பழுதாகும் எந்திரங்களுக்கு தரமான உதிரிபாகங்கள் பொருத்துவது இல்லை. முறையாக பராமரிப்பது இல்லை. இதனால் தான் அங்கு அடிக்கடி விபத்து நடக்கின்றது.

ஆனால் அதுபோன்ற தவறுகளை சரிசெய்யாமல் கேமரா செல்போன்களுக்கு தடை விதித்து இருப்பது நியாயமற்றது. இதனால் பணியாளர்கள், ஊழியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

ரத்து செய்ய வேண்டும்

மேலும் அங்கு செல்போன்களுக்கு தடை விதிப்பதற்கு தமிழ்நாடு மின்பகிர்மான கழக சேர்மன், நிர்வாக இயக்குனரிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

மின்பகிர்மான கழகத்துக்கு உட்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் வேறு எந்த அனல் மின் நிலையங்களிலும் செல்போன்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. நிர்வாகத்தினரின் தவறுகளை மறைக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமை என்ஜினீயரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு குறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழக சேர்மன், நிர்வாக இயக்குனர், தலைமை என்ஜினீயர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story