மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேட்டி


மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:40 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேட்டி

நாமக்கல், -

வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தலை தடுக்க எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.

ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் ராஜகோபால், பொருளாளர் அகத்தியன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் முருகேசன், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கைலாசம், செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலத்தில் மணல் கிடங்குகளில் 19-ந் தேதி முதல் அதிகபாரம் ஏற்றுவது இல்லை என முடிவு செய்யப்பட்டு இருப்பதற்கும், இன்று (வியாழக்கிழமை) முதல் திருச்சி மண்டலத்தில் அதிகபாரம் ஏற்றுவது இல்லை என அறிவித்தமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கண்காணிப்பு கேமரா

பின்னர் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

கர்நாடக மாநிலத்திற்கு மணல் கடத்தி செல்லும் வாகனங்களை தடை செய்ய மணல் லாரிகளுக்கு தனி வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் லாரிகளில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தினால், மணல் கடத்தலை தடுக்க முடியும்.

மேலும் வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் எல்லையோர மாவட்டங்களில் உள்ள 24 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் மணல் கடத்தும் லாரிகளை அடையாளம் கண்டு மணல் கடத்தலை தடுக்க முடியும். கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் மணல் லாரிகளை சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் மாமூல் கொடுக்கும் வாகன ஓட்டிகளை விரைவாக அனுமதிப்பதையும் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story