ஜவளகிரி காப்புக்காட்டில் சுற்றித்திரியும் யானைகளை விரட்டும் பணி தீவிரம்


ஜவளகிரி காப்புக்காட்டில் சுற்றித்திரியும் யானைகளை விரட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஜவளகிரி காப்புக்காட்டில் சுற்றித்திரியும் யானைகளை விரட்டும் பணி தீவிரம்

தேன்கனிக்கோட்டை,


ஜவளகிரி காப்புக்காட்டில் சுற்றித்திரியும் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேவர்பெட்டா வழியாக வந்தன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து ஜவளகிரி, நொகனூர், அய்யூர், பெட்டமுகிலாளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

இவைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன.

விரட்டும் பணி

இந்த நிலையில் ஓசூர், சானமாவு, பீர்ஜேபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நொகனூர் காப்புக்காட்டிற்கு வந்தன. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனஅலுவலர் ராஜேந்திரன் உத்தரவுப்படி தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி, ஜவளகிரி ஆகிய வனச்சரகத்தை சேர்ந்த வனவர்கள், வன பாதுகாவலர்கள், வேட்டை தடுப்பு குழுவினர் உள்பட 70 வன ஊழியர்கள் நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த யானைகளை மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் ஜவளகிரி காப்புக்காட்டிற்கு விரட்டினர்.

அங்கிருந்து யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story