நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரிப்பு


நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரிப்பு

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசுகிறிஸ்து மண்ணுலகில் அவதரித்த தினத்தை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுவதும் இப்பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ளன.

இந்த பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் வண்ண, வண்ண ஸ்டார்களாலும், பலவண்ண மின்விளக்குகளாலும் அலங்கரித்துள்ளனர். மேலும் பலரது வீடுகளில் இயேசுவின் பிறப்பை எடுத்துக்காட்டும் வகையிலான குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்களிலும் பெரிய, பெரிய அளவிலான ஸ்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயங்கள் சரவிளக்குகளாலும், வண்ணமயமான மின் விளக்குகளாலும் இரவில் ஜொலிக்கின்றன. கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றிலும் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இரவு, பகலாக கேக் தயாரிப்பு

இவை ஒருபுறமிருக்க கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான ஜவுளி ரகங்களை பல கடைகளுக்கு சென்று தேர்வு செய்தும் வருகிறார்கள்.

இந்த பண்டிகையில் முக்கிய இடம் வகிக்கும் இனிப்பு கேக் ஆகும். அதிலும் பிளம் கேக் மற்றும் கிரீம் கேக் வகைகளுக்கு மவுசு அதிகமாகும். இதனால் நாகர்கோவிலில் உள்ள அனைத்து பேக்கரி நிறுவனத்தினரும் கடந்த சில நாட்களாகவே பலவகையான கேக் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கேக் தயாரிப்பு பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

ஆர்டர்கள் குவிகிறது

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு குழந்தைகள், சிறுவர்கள் விரும்பும் வகையில் விதம், விதமான கேக் வகைகள், பல வண்ண கிரீம்களை கொண்ட கேக் வகைகள், ஐஸ்கிரீம் கேக் வகைகள் என பல வகை கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவதற்காக கடந்த சில நாட்களாகவே பேக்கரிகளில் கேக் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு பேக்கரியிலும் கேக் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இதேபோல் கிறிஸ்துமஸ் தினத்தின்போது வாணவேடிக்கை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆர்வமுடன் பட்டாசு ரகங்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.

Next Story