தூத்துக்குடியில் தெருக்களில் பிச்சை எடுத்த 9 குழந்தைகள் மீட்பு


தூத்துக்குடியில் தெருக்களில் பிச்சை எடுத்த 9 குழந்தைகள் மீட்பு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 2:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தெருக்களில் பிச்சை எடுத்த 9 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தெருக்களில் பிச்சையெடுத்த 9 குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த பெண்கள், அதிகாரிகளால் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிச்சை எடுக்கும் குழந்தைகள்

தூத்துக்குடியில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட சமூகநல அலுவலர் ஜெயசூர்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று தூத்துக்குடியிலுள்ள தெருக்களில் திடீர் சோதனை நடத்தினர்.

9 குழந்தைகள் மீட்பு

இந்த குழுவினர் தூத்துக்குடி புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பாலவிநாயகர் கோவில் தெரு, சிவன்கோவில், மாதா கோவில் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த தெருக்களில் குழந்தைகளை வைத்து சில பெண்கள் பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தனர்.

பெண்களுக்கு எச்சரிக்கை

பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 9 குழந்தைகளை, சம்மந்தப்பட்ட பெண்களிடம் இருந்து அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு  ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த பெண்களை கடுமையாக அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story