சேலம் செவ்வாய்பேட்டையில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்


சேலம் செவ்வாய்பேட்டையில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. ஜவுளிக்கடையில் தீ சேலம் மரவனேரி கே.ஏ.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது. இவருக்கு, செவ்வாய்பேட்டை லாங்லி ரோட்

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.

ஜவுளிக்கடையில் தீ

சேலம் மரவனேரி கே.ஏ.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது. இவருக்கு, செவ்வாய்பேட்டை லாங்லி ரோட்டில் சொந்தமாக ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஜவுளிக்கடையில் சுமார் 10 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜவுளிக்கடையில் இருந்த இம்தியாஸ், வீட்டிற்கு சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் ஜவுளிக்கடையின் பின்புற பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

இதை கண்ட ஊழியர்கள், தீயை அணைக்கு முயன்றனர். ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியதால், ஊழியர்கள் கடையில் இருந்து அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடையின் உரிமையாளர் இம்தியாசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் உடனடியாக கடைக்கு விரைந்து வந்தார்.

துணிகள் நாசம்

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஜவுளிக்கடை இருக்கும் பகுதியானது, மிகவும் இடநெருக்கடி நிறைந்த இடம் என்பதால் தீயை அணைத்து கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சூரமங்கலம், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 1 மணி நேரம் போராடி ஜவுளிக்கடையில் பிடித்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிறிது நேரம் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story