குறைகளை கேட்க அமைச்சர் தலைமையில் குழு: அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு நாராயணசாமி அறிவிப்பு
அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்க அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். மாற்றுதிறனாளிகள் தினவிழா புதுவை அரசின் சம
புதுச்சேரி,
அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்க அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மாற்றுதிறனாளிகள் தினவிழாபுதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் தினவிழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை செயலாளர் மிகிர்வரதன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட முதல்–அமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார். மேலும் 23 மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருதுகளும், மாற்றுத் திறனாளிகளின் திருமண ஊக்கத்தொகையாக 24 தம்பதிகளுக்கு ரூ.8 லட்சமும், 50 பேருக்கு ரூ.30 லட்சம் செலவில் புதிய 3 சக்கர மோட்டார் சைக்கிள்களும் மற்றும் நலத்திட்ட உதவிகளும், 10–ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த பார்வைத்திறன் குறைந்த மாணவர்களுக்கு ரூ.45 ஆயிரமும் வழங்கப்பட்டன.
கவர்னர் கிரண்பெடிநிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–
இந்த அரசாங்கத்தின் சார்பில் அரசு துறை பணி இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆணை நிறைவேற்றப்படாமல் இருந்துள்ளது. இதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அரசாணை வெளியாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகள். நான் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சில விஷயங்களை தெரிவிக்கவேண்டும். தற்போது தரப்பட்டுள்ள 3 சதவீத இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பினை பெற உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். உங்களது தயாரிப்புக்கு தகுந்தாற்போல்தான் வேலை கிடைக்கும்.
சுயதொழில் அவசியம்அரசு வேலை கிடைத்தபின் உங்களது ஊனத்தையும் மீறி சிறப்பாக பணியாற்ற வேண்டும். இப்போது அரசு ஊழியர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்றே நீங்களும் பணிக்கு வந்தபின் செயலாற்றவேண்டும். மாற்றுத் திறனாளிகள் பல கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைத்துள்ளீர்கள். ஆனால் யாரும் தொழிற்கல்வியை எங்களுக்கு கற்றுத்தாருங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை.
அரசுப்பணியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சுயமாக தொழில் செய்து உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள். முடிந்தவரை சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்யுங்கள். மத்திய, மாநில அரசுகளின் திட்ட பயன்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.
நாராயணசாமிவிழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
புதுவையில் எங்கள் அரசு பதவியேற்றபின் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம், எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம் என்பது உங்களுக்கு தெரியும். புதுவை மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 900 பேர் அரசின் திட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு ரூ.71 கோடியே 71 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.56 கோடி நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஊனத்தின் சதவீத அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
அமைச்சர் தலைமையில் குழுஅரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எங்கள் அரசிடம் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. நீங்களாக கேட்பதற்கு முன்பே நானும் அமைச்சர்களும் முடிவு செய்து இடஒதுக்கீடு தந்துள்ளோம்.
மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்க சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூடி குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படும். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம். மாற்றுத் திறனாளிகளை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்று கருதுகிறோம். அவர்களது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சமூக நலத்துறை இயக்குனர் மீனாகுமாரி, துணை இயக்குனர் சரோஜினி, உதவி இயக்குனர் ரத்னா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.