பருவமழை சரிவர பெய்யாததால் மாவட்டத்தில் கண்மாய்கள், ஊருணிகள் வறண்டன; விவசாயம் முற்றிலும் பாதிப்பு


பருவமழை சரிவர பெய்யாததால் மாவட்டத்தில் கண்மாய்கள், ஊருணிகள் வறண்டன; விவசாயம் முற்றிலும் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 6:23 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை சரவர பெய்யாததால் கண்மாய்கள், ஊருணிகள் வறண்டுவிட்டன. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பருவமழை தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோ

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை சரவர பெய்யாததால் கண்மாய்கள், ஊருணிகள் வறண்டுவிட்டன. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பருவமழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யவில்லை. குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில் பருவமழை ஏறக்குறைய பொய்த்துவிட்டது என்று கூறலாம். குறிப்பிடும்படியாகவும் சிறிதளவு மழைக்கூட பெய்யவில்லை. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை முழுமையாக விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் மாவட்டமாகவே திகழ்ந்து வருகிறது. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டாவது பருவமழை கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்தனர். ஆனால் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனதால் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகி போனது. இதில் குறிப்பிடும்படியாக தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை போன்ற நெல் விளையும் இடங்களில் விவசாயம் செய்யமுடியாமல் போனது.

வறண்ட கண்மாய்கள்

மாவட்டத்திலேயே பெரிய கண்மாயாக உள்ள மறவமங்கலம் கண்மாயில் இந்த வருடம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த கண்மாயை நம்பியுள்ள 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இந்த ஆண்டு நடைபெறவில்லை. இவ்வாறு மாவட்டத்தில் சுமார் 80 சதவீத கண்மாய்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையும் வந்துவிட்டது. ஆங்காங்கே பொதுமக்கள் தண்ணீர் குடங்களுடன் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளான திருப்புவனம், மானாமதுரை ஆகிய இடங்களில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

விவசாயம் இல்லை

இதுகுறித்து சிவகங்கையை சேர்ந்த விவசாயி தனசேகர் என்பவர் கூறியதாவது:– சிவகங்கை மாவட்டம் கண்மாய், ஊருணிகள் நிறைந்த மாவட்டமாகும். இந்த பகுதி விவசாயமே கண்மாய் மற்றும் ஊருணிகளை நம்பியே நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் சிவகங்கை, வானம் பார்த்த பூமி என்று கூறப்படும் அண்டை மாவட்டமான ராமநாதபுரத்துடன் ஒன்றிவிட்டது. மழையின்றி மாவட்டம் முழுவதும் கண்மாய், ஊருணிகள் வறண்ட கிடக்கின்றன. சிறு தூரலுடன் மழை பெய்தாலே இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடையும் நிலை தான் தற்போது உள்ளது. சிவகங்கை நகரை பொறுத்தவரை மிக பழமையான செட்டி ஊருணி தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. செட்டிஊருணிக்கு தண்ணீர் வந்து நிரம்பினால் தான், அதில் இருந்து சிவகங்கை சாத்தப்பையா ஊருணி தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும். இந்த ஊருணிகளில் தண்ணீர் இல்லாததால் இதனையடுத்து உள்ள ஊருணிகளின் நிலைமையே சொல்லவே வேண்டாம். இதேபோல் சிவகங்கையில் உள்ள உடையார் சேர்வை ஊருணி, மாப்பிள்ளை தேவர் ஊருணி, கொட்டக்குடி கண்மாய், கீழ்பாத்தி கண்மாய் ஆகிய முக்கிய கண்மாய்களும் வறண்டு கிடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

வஞ்சகம்

காளையார்கோவிலை சேர்ந்த சந்திரன் என்பவர் கூறும்போது, இந்த ஆண்டும் பருவமழை பொய்பின் காரணமாக விவசாயம் செய்யமுடியவில்லை. கண்மாய்களில் ஆடு, மாடுகள் குடிக்க கூட தண்ணீர் கிடையாது. மாவட்டத்தில் பெரிய கண்மாய் என்றழைக்கப்படும் மறவமங்கலம் கண்மாயும் வறண்டுவிட்டது. இந்த ஆண்டு குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னையில் கொட்டி தீர்த்த மழையை, வறண்டு கிடக்கும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கொண்டுவராமல் வருணபகவான் வஞ்சகம் செய்துவிட்டார் என்று கூறினார்.


Next Story