அரக்கோணம் பாதாள சாக்கடை பணியால் பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


அரக்கோணம் பாதாள சாக்கடை பணியால் பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 3:00 AM IST (Updated: 22 Dec 2016 7:38 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் பாதாள சாக்கடை திட்டப்பணியால் பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி வியாபாரிகள், பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை பணிகள் அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல மாதங்களாக

அரக்கோணம்

அரக்கோணம் பாதாள சாக்கடை திட்டப்பணியால் பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி வியாபாரிகள், பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதாள சாக்கடை பணிகள்

அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக நகரில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் தொட்டிகள் அமைக்கும் பணி, குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வார்டு பகுதியை தொடர்ந்து நகரில் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் கரடுமுரடாக காணப்படுகிறது. சாலையில் கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது சாலையில் உள்ள தூசி, புழுதிமண் சாலையோரம் உள்ள கடைக்குள் சென்று குப்பையாகி விடுகிறது. இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அவதி

சில வியாபாரிகள் கடையின் முன்பாக பெரிய அளவில் பிளாஸ்டிக் திரைகளை மாட்டி வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலையும் இருந்து வருகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்களும் தூசியினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் முகத்தில் முககவசம் (மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை அரக்கோணம் – திருத்தணி சாலையில் சுவால்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் அமர்ந்து முகத்தில் மாஸ்க் அணிந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அரக்கோணம் – திருத்தணி செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, கோவிந்தசாமி, சப்–இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி, நெடுஞ்சாலை துறை பொறியாளர் மதன் முஷாபர், தாசில்தார் குமரவேல், வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகள் சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வாக்குவாதம்

அப்போது நெடுஞ்சாலை துறை பொறியாளர் மதன் முஷாபர் கூறியதாவது:–

வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நெடுஞ்சாலைகள் சரி செய்து கொடுக்கப்படும் என்றார். இதற்கு வியாபாரிகள் எங்களுக்கு எப்போது சரி செய்து கொடுக்கப்படும் என்று கூறுங்கள் என்று கேட்டனர். அதற்கு இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்து கொடுக்கப்படும் என்றார்.

இதற்கு வியாபாரிகள் ஒரு வாரத்தில் சாலையை சரி செய்து கொடுக்கவில்லை என்றால் வியாபாரிகள் நாங்கள் சாலையில் படுத்து போராட்டம் நடத்துவோம் என்றனர். அதிகாரி அந்த நிலை வராது என்றார். அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நெடுஞ்சாலை துறை பொறியாளர் மதன்முஷாபர் வியாபாரிகளிடம் ‘இன்னும் ஒரு வாரத்தில் சாலைகளை சரிசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து சாலை மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலால் அரக்கோணத்தில் திருத்தணி செல்லும் சாலையில் 2 பக்கமும் கனரக வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசையாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. காலை 9–30 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் 11–30 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதனால் அரக்கோணம்– திருத்தணி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story