நிலுவைத் தொகையை பொங்கலுக்குள் வழங்காவிட்டால் விவசாயிகள் மொட்டையடித்து போராட்டம் கரும்பு பிரிவு மாநில தலைவர் பேட்டி
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொங்கலுக்குள் வழங்காவிட்டால் விவசாயிகள் மொட்டையடித்து போராட்டம் நடத்துவோம் என்று கரும்பு பிரிவு மாநில தலைவர் சி.முனுசாமி தெரிவித்தார். அரக்கோணத்தில் பாரதீய கிசான் சங்க மாநில கரும்பு பிரிவு தலைவர் சி.மு
அரக்கோணம்
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொங்கலுக்குள் வழங்காவிட்டால் விவசாயிகள் மொட்டையடித்து போராட்டம் நடத்துவோம் என்று கரும்பு பிரிவு மாநில தலைவர் சி.முனுசாமி தெரிவித்தார்.
அரக்கோணத்தில் பாரதீய கிசான் சங்க மாநில கரும்பு பிரிவு தலைவர் சி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:–
நிலுவைத்தொகைமாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.250 கோடி வழங்கப்படாமல் அலைகழிக்கப்பட்டு வருகிறது. திரும்பவும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்தாலும் அதற்கான பணம் வருவதில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளது. அரக்கோணம் அருகே திருவலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சார்க்கரை ஆலை உள்ளது. இங்கு அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கரும்பு விவசாயிகள் கரும்புகளை அளித்து வருகின்றனர். இவ்வாறு கொடுத்த கரும்புக்கு நிலவைத் தொகை ரூ.25 கோடி இன்னும் வழங்கப்படவில்லை.
நிலுவைத் தொகை கொடுக்காததால் அரக்கோணம் சுற்றியுள்ள 3 ஆயிரம் கரும்பு விவசாயிகள் நிலை பரிதாபமாக உள்ளது.
மொட்டையடித்து போராட்டம்எங்களுக்கு வரவேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை வரும் பொங்கலுக்குள் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகள் பிரிவு மாநில தலைவரான நான் உள்பட பல விவசாயிகள் நீண்ட முடியும், தாடியும் வளர்த்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை தாமதப்படுத்தினால் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு விவசாயிகள் ஒன்று கூடி மொட்டையடிக்கும் போராட்டம் நடத்துவோம்.
எங்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பேக்ஸ் மூலமாக தகவல் அனுப்பி உள்ளோம். கரும்பு ஆலையை நிர்வகிக்கும் அரசு அலுவலர்கள் அரசிடம் பேசி எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை பெற்று தருவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.