மகாதீப தரிசனம் நிறைவு: மலையை சுற்றி வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம்
கார்த்திகை தீபத் திருவிழாவின் மகாதீப தரிசனம் நிறைவையொட்டி வெளிநாட்டு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அண்ணாமலையாரை காண வெளிநாடு, பிற மாநிலங்க
திருவண்ணாமலை,
கார்த்திகை தீபத் திருவிழாவின் மகாதீப தரிசனம் நிறைவையொட்டி வெளிநாட்டு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழாபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அண்ணாமலையாரை காண வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 3–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12–ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபம் கடந்த 12–ந் தேதி நடந்தது. 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
மகாதீபத்தை காண வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். அதன்படி கடந்த 12–ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட தீபம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணி வரை எரிந்தது.
வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம்மகாதீபத்தன்று வர இயலாத வெளிநாடு, பிற மாநில, பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மலை உச்சியில் 11 நாட்கள் எரியும் தீபத்தை காண திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
பக்தர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை கண்டு தரிசனம் செய்து ஊர் திரும்பி சென்றார்கள்.
இந்த நிலையில் மலேசியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் ஆன்மிக சுற்றுலாவாக திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் வந்தனர். மகாதீப தரிசன நிறைவையொட்டி நேற்று அதிகாலை வெளிநாட்டு பக்தர்கள் 50–க்கும் மேற்பட்டோர் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். அப்போது கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டனர்.
தீப மைமகாதீப தரிசனம் நிறைவையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு மலையில் தீபம் ஏற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்பாக அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மகாதீப கொப்பரை மலையின் உச்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து வருகிற ஜனவரி 8–ந் தேதி ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜ பெருமானுக்கு தீப மை நெற்றியில் திலகமிட்டு சிறப்பு ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு தீப மை வினியோகம் செய்யப்படுவதுடன், நெய் காணிக்கை கட்டணம் செலுத்தியவர்களுக்கு தீப மை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.