தடுப்புச்சுவர் கட்டும் போது மண்சரிந்தது: குன்னூரில் மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் சாவு ஒருவர் உயிருடன் மீட்பு
தடுப்புச்சுவர் கட்டும் போது மண்சரிந்ததால், மண்ணில் உயிருடன் புதைந்து 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தொழிலாளி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். தடுப்புச்சுவர் கட்டும் பணி நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த மேல்கரன்சி பகுதியில் உள்ள ஒரு தனியா
குன்னூர்,
தடுப்புச்சுவர் கட்டும் போது மண்சரிந்ததால், மண்ணில் உயிருடன் புதைந்து 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தொழிலாளி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
தடுப்புச்சுவர் கட்டும் பணிநீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த மேல்கரன்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் விருந்தினர் தங்க பங்களா கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பங்களாவுக்கு செல்வதற்காக சாலை அமைக்கும் பணியும், சாலையையொட்டி மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வந்தது.
தடுப்புச்சுவருக்கு அடித்தளம் அமைக்க சாலையில் இருந்து 18 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண்ணில் ஈரப்பதம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு தடுப்புச்சுவருக்காக அஸ்திவாரம் அமைக்க மேலும் சில அடி ஆழம் பள்ளம் தோண்டும் பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
புதைந்தனர்அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மண் திடீரென்று சரிந்து விழுந்தது. பள்ளத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த அரூர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கார்த்திகேயன் (வயது 26), ஆறுமுகம் (48), பிரதாப் (18), காமராஜ் (22), ஜனகன் (21) ஆகிய 5 பேர் மண்ணில் உயிருடன் புதைந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமலிங்கம் தலைமையில் 10 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மண்ணில் உயிருடன் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் உயிருடன் மீட்புமேலும் ஊட்டியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள், போலீசார், அதிரடிப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிர்ஷ்டவசமாக ஜனகன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் படுகாயம் அடைந்து இருந்ததால் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் சங்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, துணை சூப்பிரண்டு முத்தமிழ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரம் கொண்டு வர முடியாத நிலை இருந்ததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தொழிலாளர்கள் இணைந்து மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 1 மணிக்கு மண்ணில் புதைந்த கார்த்திகேயன் பிணமாக மீட்கப்பட்டார். எந்திரம் இல்லாததால் மண்வெட்டி, கடப்பாரை போன்றவற்றை கொண்டு மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பின்னர் பிரதாப், ஆறுமுகம், காமராஜ் ஆகியோரும் பிணமாக மீட்கப்பட்டனர். கடைசியாக காமராஜ் மாலை 4.30 மணிக்கு மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ஜினீயர், சூப்பர்வைசர் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எச்சரிக்கை விடுத்த அதிகாரிஇது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த வாரம் குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன்பின்னர் நான் இங்கு வந்து பார்த்த போது, தடுப்புச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். நான் தொழிலாளர்களிடம், அதிக ஆழத்தில் ஏன், பள்ளம் தோண்டுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அங்கிருந்த பணி சூப்பர்வைசர் ஒருவர் இதற்கு சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதிகமான ஆழத்தில் தோண்டினால் தான் தடுப்புச்சுவருக்கு பில்லர் அமைக்க முடியும் என்று கூறினார். பின்னர் அவர்களை எச்சரித்து விட்டு சென்று விட்டேன். இதுதொடர்பாக மேல் அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தேன். இந்த நிலையில் இன்று (நேற்று) இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறினார்.