மதுரை மீனாட்சி அம்மன் எல்லீஸ்நகர் வாகன காப்பகத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் சாலையோர கடைகளில் களைகட்டும் வியாபாரம்


மதுரை மீனாட்சி அம்மன் எல்லீஸ்நகர் வாகன காப்பகத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் சாலையோர கடைகளில் களைகட்டும் வியாபாரம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:45 AM IST (Updated: 23 Dec 2016 12:45 AM IST)
t-max-icont-min-icon

எல்லீஸ்நகர் வாகன காப்பக பகுதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரம் மும்முரமாக உள்ளது. வாகன காப்பகம் மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக பல

மதுரை,

எல்லீஸ்நகர் வாகன காப்பக பகுதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரம் மும்முரமாக உள்ளது.

வாகன காப்பகம்

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மதுரை எல்லீஸ்நகர், பழங்காநத்தம், தெப்பகுளம் ஆகிய இடங்களில் வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் இந்த பகுதியில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதம் தொடங்கி முதல் வாரங்களில் கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. ஆனால் மார்கழி மாதம் பிறந்த பின்னர் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வாகன காப்பகம் அய்யப்பா தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநில பக்தர்கள் வாகனங்களை நிறுத்தவும் தனியாக இடம் ஏற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ், வேன், கார் போன்ற வாகனங்களுக்கு 12 நேரத்திற்கு வசூலிக்கப்படும் விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளிலும் தெரியும் வகையில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இலவச உணவு

இதுகுறித்து திருச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறும்போது, கடந்த வருடமும் இதுபோல் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தேன். ஆனால் இந்த அளவிற்கு கூட்டம் இல்லை. தற்போது இந்த வாகன காப்பகத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்பட அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதுபோல், பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல் வெளிமாநில பக்தர்கள் சமைத்து சாப்பிடுவதற்கு வசதியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் சமையல் செய்து கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். வாகன காப்பகம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பதால் இந்த வாகன காப்பகத்தை அதிக பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இங்கிருந்து கோவிலுக்கு செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சுமார் 10–க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து அதிகாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. சரிவர பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு போக்குவரத்து கழக பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர் என்றார்.

களைகட்டும் வியாபாரம்

பக்தர்களின் வருகையையொட்டி இந்த பகுதியில் உள்ள சாலையோர இட்லி கடைகள், துணிக்கடைகள், பழக்கடைகள் அதிக அளவில் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த கடைகளில் வியாபாரம் களைகட்டி வருகிறது. மற்ற நாட்களை விட வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், அந்த நாட்களில் அதிக அளவு வியாபாரம் நடப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story