திருவெறும்பூர் அருகே வீடு புகுந்து துணிகரம் ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மனைவியிடம் கத்திமுனையில் 28 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரம் கொள்ளை 2 மர்ம மனிதர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருவெறும்பூர் அருகே வீடு புகுந்து துணிகரம் ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மனைவியிடம் கத்திமுனையில் 28 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரம் கொள்ளை 2 மர்ம மனிதர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே வீடு புகுந்து துணிகரம் ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மனைவியிடம் கத்திமுனையில் 28 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரம் கொள்ளை 2 மர்ம மனிதர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மனைவியிடம், கத்திமுனையில் 28 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் சாரதாநகரில் குடியிருப்பவர் வேலாயுதம்(வயது 64). பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாரதா நகரில் புதிதாக கட்டி இருந்த வீட்டிற்கு குடி வந்து, அங்கேயே தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் வேலாயுதமும், அருகே பீரோ வைக்கப்பட்டிருந்த அறையில் வேலாயுதத்தின் மனைவி விஜயகுமாரியும், மகன் பேச்சிமுத்துவும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்தநிலையில், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் முன்பக்கத்தில் பூட்டி இருந்த இரும்பு கம்பியை அறுத்து, கதவை திறந்து வீட்டிற்குள் 2 மர்ம மனிதர்கள் புகுந்தனர். அவர்கள் கத்தி மற்றும் கடப்பாரையை கையில் வைத்திருந்தனர்.

கத்தி முனையில் மிரட்டல்

அவர்கள் வேலாயுதம் படுத்திருந்த அறைக்கதவை சத்தமில்லாமல் சாத்தி வெளியில் பூட்டி விட்டு பக்கத்து அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரி அறையின் கதவை தட்டினர். தன் கணவர் தான் கதவை தட்டுகிறார் என நினைத்து விஜயகுமாரி கதவைத் திறந்தார். அப்போது மர்மமனிதர்களில் ஒருவர், அவர் கழுத்தில் கத்தியை வைத்தார். அதே சமயத்தில் மற்றொரு நபர் கடப்பாரையை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த பேச்சிமுத்துவின் தோள்பட்டையில் அடித்து, அவரையும் எழுப்பினார்.

28 பவுன் நகைகள்

இதனைத் தொடர்ந்து பேச்சிமுத்துவின் கழுத்தில் கத்தியை வைத்த ஒரு நபர், பீரோவில் உள்ள அனைத்து நகைகளையும் எடுத்து ஒரு பையில் போட்டு தரும்படி மிரட்டினார். இதனால் தன் மகன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என பயந்த விஜயகுமாரி, பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் எடுத்து மற்றொரு மர்ம நபரிடம் கொடுத்தார். மேற்கொண்டு ஏதாவது இருக்குமா? என்ற சந்தேகத்தில் பீரோவில் இருந்த துணிகளை வெளியில் அள்ளிப்போட்டு மர்மநபர்கள் தேடினர்.

இதனையடுத்து கடப்பாரையை எடுத்து விஜயகுமாரியின் தலை மீது வைத்து, அவர் உடலில் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றித்தரும்படி ஒருவர் மிரட்டினார். இதனைத்தொடர்ந்து விஜயகுமாரி தன் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, வளையல், தோடு, மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளை கழற்றி கொடுத்தார். அவற்றை பெற்றுக் கொண்ட மர்ம மனிதர்கள் மொத்தம் 28 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் அங்கிருந்து சென்று வீட்டின் பின்பக்க சுவரில் ஏறிக்குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

இதனையடுத்து அந்த அறையை விட்டு வெளியே வந்த விஜயகுமாரியும், அவரது மகனும் வேலாயுதம் படுத்திருந்த அறை கதவை திறந்து அவரை எழுப்பினர். கொள்ளையர்கள் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது குறித்து அவரிடம் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சுற்றுப்புறத்தில் தடயங்களை தேடினர். அப்போது, அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி கொண்டிருக்கும் ஒரு இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன. அது கொள்ளையர்கள் மது அருந்தி விட்டு வீசியதாக இருக்கும் என கருதிய போலீசார், விஜயகுமாரியிடம் மேற்கொண்டு விசாரித்ததில், அவருடைய நைட்டியை கொண்டு முகத்தை மூடியபடி இருவர் வந்ததாகவும், அதில் ஒருவர் கைலியும், மற்றொருவர் டவுசரும் அணிந்திருந்ததாகவும் அவர்களுக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, கொள்ளையர்கள் வீட்டில் எந்த விளக்கையும் போடாமல் இரவு விளக்கு (நைட்லேம்ப்) வெளிச்சத்திலேயே கொள்ளையடித்ததாகவும் கூறினார்.

பரபரப்பு

சம்பவ இடத்திற்கு விரல் ரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும்பணி நடந்தது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற 2 மர்ம மனிதர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடும்பமே தூங்கிக்கொண்டிருந்த ஒரு வீட்டின் கதவை மர்ம மனிதர்கள் உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்்படுத்தி உள்ளது.

Next Story