குன்னம் அருகே 4-ம் வகுப்பு மாணவன் பாம்பு கடித்து சாவு


குன்னம் அருகே 4-ம் வகுப்பு மாணவன் பாம்பு கடித்து சாவு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 2:19 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே 4-ம் வகுப்பு மாணவன் பாம்பு கடித்து சாவு

குன்னம்,

குன்னம் அருகே பாம்பு கடித்ததில் 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

பாம்பு கடித்து சாவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 30). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேரி (25). இவர்களுடைய குழந்தைகள் குமரேசன் (9), ராஜேசுவரி (7). இதில் குமரேசன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். ராஜேசுவரி 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல குமரேசன் பள்ளிக்கு சென்றான். அங்கு பாட இடைவேளையின் போது சிறுநீர் கழிப்பதற்காக குமரேசன் சென்று கொண்டிருந்தான். கழிப்பிடத்தின் அருகே நடந்து சென்ற போது அங்கிருந்த புளியமர பொந்தினுள் இருந்து வந்த விஷப்பாம்பு ஒன்று திடீரென குமரேசனை கடித்து விட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் மாணவன் குமரேசன் கதறி அழுதான். இதையறிந்த சகமாணவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த ஆசிரியர்கள், குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனர். அங்கு மாணவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமரேசனின் பெற்றோர் பதற்றத்துடன் ஓடி வந்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குமரேசன் அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு குமரேசனை பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பெற்றோர் கதறல்

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன குமரேசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். ஆஸ்பத்திரி முன்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற 4-ம் வகுப்பு மாணவன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story