தஞ்சை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு ரூ.6,739 கோடிக்கு கடன் வழங்க திட்டம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்


தஞ்சை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு ரூ.6,739 கோடிக்கு கடன் வழங்க திட்டம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 2:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு ரூ.6,739 கோடிக்கு கடன் வழங்க திட்டம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 739 கோடிக்கு கடன் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

வளம் சார்ந்த கடன் திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் 2017-18-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில் தஞ்சை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து ரூ.6 ஆயிரத்து 738 கோடியே 96 லட்சத்திற்கு கடன் வழங்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது நடப்பாண்டை விட 10 சதவீதம் அதிகம். விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த திட்டம் விளக்குகிறது.

மாற்ற உதவும்

இது போன்ற கடன்வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன் படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்வதோடு விவசாயத்தில் வருமானத்தை பெருக்க உதவும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயத்தில் மாற்றம்

நபார்டு வங்கி தஞ்சை மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், “இந்த கடன் திட்ட அறிக்கை பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்கள் அடிப் படையில் தயாரிக்கப் பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய மாற்றங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது”என்றார்.

இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் முருகன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பாலு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் சீனிவாசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சொக்கலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story