பாபநாசம் மலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


பாபநாசம் மலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 2:22 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் மலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் மலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. மலைப்பகுதியில் வனத்துறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையானது தமிழகம்– கேரளாவை இணைக்கும் மலை பகுதியாகும். தமிழகத்தின் கடைசி எல்லை பொதிகை மலைதான். அங்குதான் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகிறது. இந்த மலையானது அடர்ந்த வனப்பகுதியை கொண்டது.

இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளும் இந்த மலைப்பகுதியில்தான் உள்ளன. இங்கு களக்காடு– முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த புலிகள் காப்பகமானது 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.

தீவிர சோதனை


இந்த வனப்பகுதிக்குள் எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது. அந்த அளவுக்கு வனத்துறையினரின் சோதனை இருக்கும். வனப்பகுதிக்குள் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்னரே அனுமதி சீட்டுடன் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

அதுவும் மாலை 6 மணிக்கு மேல் வனப்பகுதிக்குள் காணிக்காரர்கள் மற்றும் வனத்துறையினரை தவிர வேறு யாரும் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாபநாசம் மலை பகுதியில் குறிப்பாக பெரியமயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் அடையாளம் தெரியாத வெளிஆட்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நடுத்தர வயதுடைய ஆட்கள் ஆங்காங்கே வனப்பகுதியில் சுற்றி திரிவதாக தெரிகிறது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டமா?


அடர்ந்த வனப்பகுதியில் ஊறுகாய் மற்றும் சிகரெட், பீடி கட்டுகளின் தாள்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்று காணிக்காரர்கள் கூறுகின்றனர்.

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக தமிழகத்தின் கொடைக்கானல், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிக்குள் ஊடுருவி அங்குள்ளவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே கேரள வனப்பகுதியில் இருந்து பொதிகை மலை வழியாக பாபநாசம் மலை பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வனத்துறையிடம் புகார்


இதற்கிடையே பாபநாசம் மலை அடர்ந்த வனப்பகுதிக்குள் வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக அகஸ்தியர் காணிக்குடியிருப்பில் வசித்து வரும் ஆதிவாசிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ஆறுமுகம் என்பவர் நெல்லை மாவட்ட தலைமை வனக்காப்பாளர் மற்றும் புலிகள் காப்பக கள இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், கேரளாவில் இருந்து கொடைக்கானல், சத்தியமங்கலம் உள்ளிட்ட தமிழக வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள பழங்குடியின மக்களை அடிக்கடி சிறைபிடித்து அச்சுறுத்தி வருகின்றனர். எனவே பாபநாசம் மலை பகுதியிலும் வெளிஆட்கள் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது. ஆட்கள் நடமாட்டம் இருப்பதற்கான நம்ப தகுந்த அடையாளங்கள் காணப்படுகின்றன. எனவே முன்எச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தீவிர கண்காணிப்பு


இந்த பிரச்சினை குறித்து களக்காடு– முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஜெயராஜ் கூறியதாவது:–

தமிழக வனத்துறை அமைச்சகத்தில் இருந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணிக்கும்படியும், அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும் எங்களுக்கு ஏற்கனவே உத்தரவு வந்துள்ளது. கன்னிகட்டி பங்களாவுக்கு மேல் உள்ள கேரள எல்லை பகுதியான பொதிகை மலை பகுதியில் தமிழக வனத்துறைக்கான முகாம்கள் உள்ளன. 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள களக்காடு– முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மாவட்ட தலைமை வன பாதுகாவலரும், கள இயக்குனருமான வெங்கடேஷ் உத்தரவுப்படி புலிகள் காப்பக பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அதற்காக களக்காடு புலிகள் காப்பக பகுதியில் 90 கேமராக்களும், முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் 156 கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மற்றும் ரோந்து, கண்காணிப்பு என்பவை வழக்கமானதுதான். இருந்தாலும் வனத்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த உத்தரவையும் நாங்கள் மிக கவனமாக கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். அதற்காக அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வன ஆர்வலர்களின் கோரிக்கை


பாபநாசம் மலை பகுதியில் கடந்த காலங்களில் எத்தனையோ அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. அதனை எல்லாம் வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு தடுத்துள்ளனர். எவ்வளவு அடர்ந்த வனப்பகுதியாக இருந்தாலும் மிகவும் பாதுகாப்புடன் சென்று வரக்கூடியவர்கள் காணிக்காரர்கள். அவர்களே, வனப்பகுதியில் வெளிஆட்கள் நடமாட்டம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையில் வனத்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்படி யாராவது வெளிஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வனமும், வனத்தின் வளர்ச்சியும் பாதுகாக்கப்படும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story