மகனின் செலவுக்காக தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த பெண், தீக்குளித்து தற்கொலை நகை கொடுத்ததை கணவரிடம் மறைப்பதற்காக விபரீத முடிவு


மகனின் செலவுக்காக தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த பெண், தீக்குளித்து தற்கொலை நகை கொடுத்ததை கணவரிடம் மறைப்பதற்காக விபரீத முடிவு
x
தினத்தந்தி 23 Dec 2016 3:45 AM IST (Updated: 23 Dec 2016 2:22 AM IST)
t-max-icont-min-icon

மகனின் செலவுக்காக தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த பெண், தீக்குளித்து தற்கொலை நகை கொடுத்ததை கணவரிடம் மறைப்பதற்காக விபரீத முடிவு

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே மகனின் செலவுக்காக கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்து விட்டு கணவரிடம் மறைப்பதற்காக பெண் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

நகையை கேட்ட மகன்

பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் சக்திநகர் தெருவை சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 63). இவர்களுடைய மகனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களில், மகனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார். அதன் பின்பு, அந்த மகன் பெற்றோருடன் தங்கி வந்தார். மேலும், தனது அன்றாட செலவுக்கு தாய் இசக்கியம்மாளிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது தாயிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு இசக்கியம்மாள், தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். அப்போது, தாயின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுக்குமாறு மகன் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. மகனின் தொந்தரவு தாங்க முடியாமல் இசக்கியம்மாள் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார்.

கணவரிடம் மறைக்க முயற்சி

சிறிது நேரம் கழித்து பத்மநாபபிள்ளை வீட்டுக்கு வந்தார். அவர் தனது மனைவியின் கழுத்தில் தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இசக்கியம்மாளிடம் கேட்ட போது, தங்க சங்கிலியில் இருந்த அழுக்கை எடுப்பதற்காக கழற்றி வைத்திருப்பதாக கூறினார். அவர் கூறிய பதிலில் சந்தேகமடைந்த பத்மநாபபிள்ளை, ‘நகையில் இருக்கும் அழுக்கை பின்னர் எடுக்கலாம். முதலில் நகையை எடுத்து வா...’ என மனைவியிடம் கண்டிப்புடன் கூறினார்.

கணவரிடம் சரியாக மாட்டிக்கொண்டோம் என்பதை உணர்ந்த இசக்கியம்மாள் சமையல் அறையில் சென்று கதவை மூடிக்கொண்டார். மகனிடம் தான் நகையை கொடுத்தேன் என்று சொல்ல அவர் விரும்பவில்லை.

தாய் தற்கொலை

இந்தநிலையில் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து கதவை உடைத்து இசக்கியம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனின் செலவுக்காக நகையை கொடுத்து விட்டு கணவரிடம் மறைப்பதற்காக பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story