வீடு கட்டித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது மேலும் 5 பேரை போலீஸ் தேடுகிறது


வீடு கட்டித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது மேலும் 5 பேரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 23 Dec 2016 3:45 AM IST (Updated: 23 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

வீடு கட்டித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது மேலும் 5 பேரை போலீஸ் தேடுகிறது

நாகர்கோவில்,

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 76). இவர் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், மேக்காமண்டபத்தைச் சேர்ந்த சரோஜா என்பவர் அப்பகுதியில் உள்ள 8 சென்ட் நிலத்தை எனக்கு விற்றார். அதற்கு ரூ.8 லட்சம் என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து அதே இடத்தில் புதிய வீடு கட்டித்தருவதாக சரோஜாவும், அவருடைய மகள் ஜோனிஷா (24), மகன் எட்வின்ஜோஸ் உள்பட 6 பேர் கூறினார்கள். அதற்கு ரூ.73 லட்சம் கேட்டனர். இதை நம்பி நான் ரூ.73 லட்சத்தை பல தவணைகளாக ஜோனிஷா வங்கி கணக்கில் செலுத்தினேன். ஆனால் அவர்கள் கூறியதுபோல எனக்கு புதிய வீடு கட்டித்தரவில்லை. மேலும் சரோஜா எனக்கு விற்ற 8 சென்ட் நிலமும் அவருக்கு சொந்தமானது இல்லை. எனவே என்னிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் சரோஜா, ஜோனிஷா, எட்வின்ஜோஸ் உள்பட 6 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த 6 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜோனிஷா சென்னையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சென்னைக்கு சென்று ஜோனிஷாவை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story