விபத்தில் பலியான லாரி டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவுபஸ் ஜப்தி


விபத்தில் பலியான லாரி டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவுபஸ் ஜப்தி
x
தினத்தந்தி 24 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 7:53 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பலியான லாரி டிரைவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால், அரசு விரைவுபஸ் ஜப்தி செய்யப்பட்டது. லாரி டிரைவர் உள்பட 4 பேர் பலி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(வயது34). டாரஸ் லாரி டிரைவர். இவ

சேலம்,

விபத்தில் பலியான லாரி டிரைவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால், அரசு விரைவுபஸ் ஜப்தி செய்யப்பட்டது.

லாரி டிரைவர் உள்பட 4 பேர் பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(வயது34). டாரஸ் லாரி டிரைவர். இவர் கடந்த 4.2.2014 அன்று, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், டாரஸ் லாரியில் செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்றார்.

அன்று அதிகாலை 2 மணியளவில் லாரி சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து உடையாப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி இந்திராநகரில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி அசுர வேகத்தில் வந்த அரசு விரைவு பஸ், எதிர்பாராத விதமாக டாரஸ் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அரசு விரைவு பஸ் டிரைவரான நாமக்கல் மாவட்டம் அத்தனூரை சேர்ந்த பழனிசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த தனலட்சுமி மற்றும் ஒரு பயணியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

நஷ்டஈடு கேட்டு வழக்கு

இந்த விபத்து குறித்து சேலம் வடக்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அரசு விரைவு பஸ் மோதி பலியான, தர்மபுரி மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமரவேல் குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து பிரிவின்கீழ் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது லாரி டிரைவரின் மனைவி லோகேஸ்வரி, மகன்கள் பாலமுருகன், திலீபன், தாயார் ரத்தினம் ஆகியோர் ரூ.25 லட்சம் நஷ்டஈடு கேட்டு, சேலம் மோட்டார் வாகன சிறப்பு தீர்பாய நீதிமன்றத்தில் கடந்த 10.2.2014 அன்று வழக்கு தொடர்ந்தனர்.

அரசு பஸ் ஜப்தி

இந்த வழக்கில் கடந்த 21.7.2016 அன்று நீதிபதி பாலசுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட லாரி டிரைவரின் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.14 லட்சத்து 35 ஆயிரத்து 575 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் நஷ்டஈடு தொகை வழங்க காலதாமதப்படுத்தி வந்தது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் கோர்ட்டு அமினா சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர், சேலம் மணக்காடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் கோர்ட்டு உத்தரவு நகலை காண்பித்து, காரைக்குடி–பெங்களூரு வழித்தட அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்தனர். இதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பஸ் கோர்ட்டு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.


Next Story