சேத்தியாத்தோப்பு அருகே திருமணமான மறுநாளே காதல் மனைவியை தவிக்கவிட்டு சென்ற வாலிபர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பூபாலன்(வயது 33). இவரும், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. காதலுக்கு பூ
சேத்தியாத்தோப்பு,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பூபாலன்(வயது 33). இவரும், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. காதலுக்கு பூபாலன் வீட்டில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பூபாலன், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து, பூபாலனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இதையடுத்து பூபாலன் அன்று ஒரு நாள் மட்டும் அந்த பெண்ணின் வீட்டில் தங்கினார். மறுநாள் காலையில் பூபாலன், அந்த பெண்ணிடம் திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்காக வீட்டில் உள்ள சான்றிதழை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வரவில்லை. இதனால் அந்த பெண் பரிதவித்தார். உடனே அந்த பெண், பூபாலனின் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, உன்னோடு வாழமுடியாது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர்.