முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Dec 2016 12:15 AM IST (Updated: 23 Dec 2016 9:51 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த கனகசபாபதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் 2012–ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:– கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை

மதுரை,

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த கனகசபாபதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் 2012–ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. ஆனால் அந்த அணை உடைந்தால் கேரளத்தின் பெரும்பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அங்குள்ளவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள். 2011–ம் ஆண்டு அங்குள்ள அரசியல் கட்சியினர் அணை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தையும், அணை மதகுகளையும் சேதப்படுத்தினர். இதனால் இரு மாநிலத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் இடம் பெயரும் சூழ்நிலை ஏற்படும். அணையை பாதுகாக்கும் வகையில் அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்தமாதம்(ஜனவரி) 30–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதேபோல மதுரையை சேர்ந்த பொதுப்பணித்துறை மூத்த என்ஜினீயர் சங்க துணைத்தலைவர் விஜயகுமார் தாக்கல் செய்த மனுவில், முல்லைப்பெரியாறு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவும் ஜனவரி 30–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story