வாகனசோதனையின் போது விபத்தில் சிக்கி வாலிபர் சாவு: இளம்பிள்ளை பகுதியில் பதற்றம் நீடிப்பு; மேலும் ஒருவர் கைது கோர்ட்டில் இன்னொருவர் சரண்

வாகனசோதனையின் போது விபத்தில் சிக்கி வாலிபர் சாவு: இளம்பிள்ளை பகுதியில் பதற்றம் நீடிப்பு; மேலும் ஒருவர் கைது கோர்ட்டில் இன்னொருவர் சரண்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 10:02 PM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே போலீசாரின் வாகனசோதனையின் போது விபத்தில் சிக்கி வாலிபர் இறந்தார். அதையொட்டி அங்கு ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து இன்னும் பதற்றம் நீடிக்கிறது. இதில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இன்னொருவர் பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இடைப்பாடி,

வாலிபர் சாவு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிபட்டி பூசாரி காட்டுவளவை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது24). இவர் கடந்த 17–ந்தேதி போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்து மோட்டார்சைக்கிளில் திரும்பி செல்ல முயன்றார். அப்போது அவர் லாரி மோதி இறந்து போனார். இதனால் அப்பகுதியில் போலீசாரின் வாகனம் தீவைக்கப்பட்டு கலவரம் நடந்தது. அதையொட்டி போலீசார் கண்ணீர்புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக 150 பேரை பிடித்து வந்து விசாரணை செய்தனர். அதையொட்டி 92 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்தநிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இளம்பிள்ளை சந்தைபேட்டை பகுதியில் மறைந்திருந்த ஜம்பு என்ற வடிவேலை(44) நேற்று கைது செய்தனர். வாலிபர் சரவணக்குமார் இறந்ததையொட்டி கலவரம் ஏற்பட்டு ஒருவாரம் ஆகியும் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இளம்பிள்ளை பகுதியில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோர்ட்டில் இன்னொருவர் சரண்

இந்தநிலையில் வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்ட இடங்கணசாலை பகுதியை சேர்ந்த ராஜா (48) என்பவர் நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நீதிபதி யுவராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் சரண் அடைந்த ராஜா பாப்பிரெட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story