தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை காப்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண்மை அதிகாரி செயல்விளக்கம்


தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை காப்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண்மை அதிகாரி செயல்விளக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 23 Dec 2016 11:20 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை காப்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண்மை அதிகாரி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். நீர் ஆதாரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த மழை தான் தமிழகத்தில் விவசாயம் மற்ற

வேளாங்கண்ணி,

கீழையூர் ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை காப்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண்மை அதிகாரி செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

நீர் ஆதாரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த மழை தான் தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் வடகிழக்கு பருவமழையையும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரையும் நம்பியே குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் பொய்த்துவிட்டது. அதேபோல் சம்பா சாகுபடியும் சரிவர மழை பெய்யாததால் பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நடப்பு ஆண்டும் குறுவை பொய்த்து போன நிலையில், சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் மாதம் 20–ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் ஆறுகள், வாய்க்கால்களில் பாய்வதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. வயலில் தண்ணீர் பாயவில்லை. இதனால் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்திருந்த விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர்.

செயல்விளக்கம்

இதனால் மனவேதனை அடைந்த விவசாயிகள் சிலர் பயிர்கள் கருகியும், வயல்கள் வெடித்துபோயும் இருந்ததை கண்டு என்ன செய்வதன்றே புரியாத நிலையில் தங்களது விவசாய நிலங்களில் கால்நடைகளை மேயவிட்டனர். இந்தநிலையில் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் ஒருசில வயல்களில் பயிர்கள் ஓரளவு முளைத்து வந்துள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத நிலையில் பயிர்களை மேற்கொண்டு எவ்வாறு விளைவிப்பது என்பது குறித்து, விவசாயிகள் சிலர் திருக்குவளை வேளாண்மை அதிகாரி பாலசுப்ரமணியனிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு அவர் தண்ணீர் இல்லாமல் ஓரளவிற்கு பசுமையாக காணப்படும் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4 கிலோகிராம் பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளித்தால் 15 முதல் 20 நாட்கள் வரை பயிர் பசுமையாக இருக்கும் என்று விளக்கம் அளித்தார். மேலும் வாழக்கரை ஊராட்சி தெற்கு வெளி பகுதியில் உள்ள வயலில் உரம் தெளிப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். அப்போது வட்டார வேளாண்மை தொழில் நுட்ப திட்ட மேலாளர் முல்லைவேந்தன், விதை ஆய்வாளர் செந்தில் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.


Next Story