தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டம் சிவலார்பட்டி பஞ்சாயத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டம் சிவலார்பட்டி பஞ்சாயத்தை வறட்சி  பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2016 2:00 AM IST (Updated: 24 Dec 2016 12:07 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிவலார்பட்டி பகுதி விவசாயிகள் கருகிய பயிர்களுடன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதூர் சிவலார்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை தண்ணீரின்றி கரு

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிவலார்பட்டி பகுதி விவசாயிகள் கருகிய பயிர்களுடன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் புதூர் சிவலார்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை தண்ணீரின்றி கருகிய பயிர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு புதூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் எரிமலை வரதன் தலைமை தாங்கினார். விவசாயிகள் மோகன்தாஸ், பவுன்ராஜ், பால்ராஜ், ராமமூர்த்தி, தனுஷ்கோடி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தின் போது, மழையின்றி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள சிவலார்பட்டி பஞ்சாயத்தில், சிவலார்பட்டி, கம்பத்து பட்டி, மேலப்பட்டி, சுப்புலாபுரம் ஆகிய கிராமங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநில ம.தி.மு.க. மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில்,‘ இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம், கம்பு, சோளம், பருத்தி, பாசிப்பயறு, உளுந்து, மிளகாய் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர்கள் அனைத்தும் மழை இல்லாததால் கருகிவிட்டன. ஆகையால் 2014–15–ம் ஆண்டுக்கான இன்சூரன்சு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருகிய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். சிவலார்பட்டி பஞ்சாயத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.


Next Story