ஈரோடு மூலப்பாளையத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் நகை–பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு மூலப்பாளையத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ரெயில்வே ஊழியர் ஈரோடு மூலப்பாளையத்தை அடுத்த 46 புதூர் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 61). ஓய்வுப்பெற்ற
ஈரோடு,
ஈரோடு மூலப்பாளையத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரெயில்வே ஊழியர்ஈரோடு மூலப்பாளையத்தை அடுத்த 46 புதூர் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 61). ஓய்வுப்பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி சரோஜாதேவி (55). இவர்களுக்கு பரணிதரன் (30), நரேந்திரன் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் பரணிதரன் சென்னையிலும், நரேந்திரன் புதுடெல்லியிலும் வசித்து வருகிறார்கள். கடந்த 21–ந் தேதி ரவீந்திரனும், சரோஜாதேவியும் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ரவீந்திரன் வீடு அமைந்துள்ள தெரு வழியாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நடந்து சென்றார். அப்போது ரவீந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பாதி திறந்தநிலையில் இருந்தது. இதுபற்றி அவர் சென்னைக்கு சென்று இருந்த ரவீந்திரனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். மேலும், இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
8 பவுன் நகைஅதன்பின்னர் ரவீந்திரன் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து புறப்பட்டு ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு நேற்று காலை வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் 2 படுக்கை அறைகளில் இருந்த பீரோ, அலமாரி ஆகியவற்றில் உள்ள பொருட்களை கலைத்து பார்த்தனர். இதில் பீரோவில் உள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
மற்றொரு வீடுஇதேபோல் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (63) என்பவர் வீட்டிலும் மர்மநபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர். இவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்துடன் 46 புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளிலும் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு மூலப்பாளையத்தில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் திருட்டுபோய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 5 திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளன. எனவே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.’’, என்றனர்.