திருப்பூரில் மின்கட்டணம் செலுத்தாததால் போக்குவரத்து சிக்னல்களின் மின் இணைப்புகள் துண்டிப்பு வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம்


திருப்பூரில் மின்கட்டணம் செலுத்தாததால் போக்குவரத்து சிக்னல்களின் மின் இணைப்புகள் துண்டிப்பு வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மின்கட்டணம் செலுத்தாததால் போக்குவரத்து சிக்னல்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னல்கள் செயல்படாததால் வாகன ஓட்டுனர்கள் தாறுமாறாக சென்று விபத்து ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது. தானியங்கி சிக்னல்கள் திருப்பூர் மாநகரம் உள

திருப்பூர்,

திருப்பூரில் மின்கட்டணம் செலுத்தாததால் போக்குவரத்து சிக்னல்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னல்கள் செயல்படாததால் வாகன ஓட்டுனர்கள் தாறுமாறாக சென்று விபத்து ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.

தானியங்கி சிக்னல்கள்

திருப்பூர் மாநகரம் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் போலீசார் தானியங்கி சிக்னல்களை அமைத்தனர். மேலும் மின்தடை நேரத்தில் சிக்னல்களை இயக்க ‘இன்வேட்டர்’ வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

இந்த சிக்னல் கம்பங்களில் நகைக்கடைகள், ஜவுளி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களை அமைத்து, அவற்றுக்கு விளம்பர கட்டணம், மாதம் தோறும் பராமரிப்பு செலவு என்று சிக்னல்களை அமைத்த நிறுவனத்தினர் பெற்று வந்தனர். அந்த தொகையை வைத்து சிக்னல்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தியதுடன், சிக்னல்களையும் அந்த தனியார் நிறுவனத்தினரே பராமரித்து வந்தனர்.

விளம்பர பலகைகள் அகற்றம்

இந்தநிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன் மாநகரில் உள்ள சிக்னல் கம்பங்களில் உள்ள விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த மாநகர போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து விளம்பர பலகைகளும் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் சிக்னல்களை அமைத்த தனியார் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனம் சிக்னல்களை பராமரிப்பதை நிறுத்தி விட்டன.

இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்னல் விளக்குகள் பழுதடைந்து பாதி ஒளிர்ந்த நிலையில் உள்ளன. சில இடங்களில் ‘டைமர்’ விளக்குகள் ஒளிர்வதில்லை. மேலும் பல்வேறு சிக்னல்களில் அமைக்கப்பட்டு இருந்த ‘இன்வேட்டர்’களும் பழுதடைந்து விட்டன. இதனால் மின்தடை ஏற்படும் நேரங்களில் சிக்னல்கள் இயங்குவதில்லை.

மின் இணைப்பு துண்டிப்பு

இதற்கிடையே அந்த தனியார் நிறுவனம், சிக்னல்களுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைக்க தொடங்கி உள்ளன. இதனால் மின் கட்டண பாக்கி உள்ள சிக்னல்களின் மின் இணைப்புகளை மின்வாரியத்தினர் துண்டித்து வருகிறார்கள். இதன்காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிக்னல் விளக்குகள் செயல்படுவது இல்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின் கட்டண பாக்கி காரணமாக திருப்பூர்–அவினாசி ரோடு காந்திநகர் சிக்னலின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் சுமார் ஒருவாரம் போராடி எப்படியோ அந்த மின்கட்டணத்தை செலுத்தி மீண்டும் மின் இணைப்பை பெற்றனர். தற்போது, அவினாசி ரோடு பங்களா பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள சிக்னலின் மின் இணைப்பு மின்கட்டண பாக்கியால் கடந்த 16–ந் தேதி துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண பாக்கி

இந்த சிக்னலுக்கான மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்து 796–ஐ செலுத்த கடந்த 14–ந் தேதி கடைசிநாள் ஆகும். ஆனால் அந்த தொகை நேற்று மாலை வரை செலுத்தப்படவில்லை. மின்இணைப்பு இல்லாததால் அந்த சிக்னல் தற்போது முடங்கி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றுவருகிறார்கள்.

போலீசார் பணியில் இல்லாத நேரங்களில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இன்னும் சில சிக்னல்களுக்கு அடுத்த மாதம்(ஜனவரி) முதல் வாரத்தில் மின்கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும் செலுத்தப்படாத பட்சத்தில் அந்த சிக்னல்களின் மின் இணைப்பும் துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து சிக்னல்களையும் பராமரிக்க போதுமான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story