அரசியல் உள்நோக்கத்திற்காக குறை கூறுவதா? அதிகாரிகள் கடமையை செய்கிறார்கள் ராம மோகனராவ் வீடு சோதனை பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடந்தது, அதிகாரிகள் அவரவர் கடமையை செய்கிறார்கள். அரசியல் உள்நோக்கத்திற்காக இதை சிலர் குறை கூறுகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்திய அரசு ரொக்கமில்லா பணப்பரிமாற்றம் முறையை
நாகர்கோவில்
ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடந்தது, அதிகாரிகள் அவரவர் கடமையை செய்கிறார்கள். அரசியல் உள்நோக்கத்திற்காக இதை சிலர் குறை கூறுகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிமத்திய அரசு ரொக்கமில்லா பணப்பரிமாற்றம் முறையை ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தார்கள். அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் பிரதமர் நரேந்திரமோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
மோடி மீது நம்பிக்கைஇப்போது உள்ள சூழ்நிலையில் சில வங்கிகளில் போதுமான அளவு பணம் கிடைப்பதில்லை. இருப்பினும் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். இது பிரதமர் நரேந்திரமோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அடுத்தபடியாக நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகள் தான் உள்ளனர்.
நமது மூதாதையர்கள் காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. பின்னர் பணம் வந்தது. தற்போது ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை வந்துள்ளது. இதற்காக வங்கிகள் பல கார்டுகளை வழங்குகின்றன. இதன் மூலம் மக்கள் பொருட்கள் வாங்க கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ராமமோகன ராவ் வீட்டில் சோதனைமுன்னதாக, சுசீந்திரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் சோதனை நடந்துள்ளது. அதிகாரிகள் அவரவர் கடமைகளை செய்கிறார்கள். இதை குறை கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கத்திற்காக கூறுகிறார்கள். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் கூறியது, அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பது தெரிகிறது. தமிழகத்தில் 4 வழிச்சாலைகள் 6 வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலாவதாக சென்னை முதல் திருச்சி வரை 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.