மாயனூரில் மணல் வழங்க கோரி அலுவலகங்களுக்கு தீ வைத்து கலவரத்தை தூண்டியதாக 20 பேர் கைது


மாயனூரில் மணல் வழங்க கோரி அலுவலகங்களுக்கு தீ வைத்து கலவரத்தை தூண்டியதாக 20 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 3:11 AM IST)
t-max-icont-min-icon

மாயனூரில் மணல் வழங்க கோரி அலுவலகங்களுக்கு தீ வைத்து கலவரத்தை தூண்டியதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. மணல் குவாரி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூரில் மணல்

கிருஷ்ணராயபுரம்,

மாயனூரில் மணல் வழங்க கோரி அலுவலகங்களுக்கு தீ வைத்து கலவரத்தை தூண்டியதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

மணல் குவாரி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூரில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து மணல் அள்ளிச்செல்வதற்காக கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், கோபி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு டோக்கன் வழங்கப்பட்ட பிறகு, டிரைவர்கள் திருக்காம்புலியூர் மணல் குவாரிக்கு வந்து லாரிகளில் மணல் அள்ளிச்செல்வர். இந்நிலையில் மாயனூரில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் மணல் அள்ளிச்செல்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் காத்திருந்தன. ஆனால் கடந்த 3 நாட்களாக மணல் வழங்க டோக்கன் வழங்கப்படவில்லை.

தடியடி

இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர்கள் நேற்று முன்தினம் இரவு கரூர்– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது லாரி டிரைவர்கள் கல்வீசி தாக்கியதில் ரோந்து போலீஸ் ஏட்டு ரத்தினகிரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கு மணல் அள்ள டோக்கன் வழங்க ஓலையால் அமைக்கப்பட்டு இருந்த 3 அலுவலகங்களை தீவைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில், அதிரடி படையினர் மற்றும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

20 பேர் கைது

இந்நிலையில் அலுவலகங்களை தீ வைத்து எரித்து கலவரத்தை தூண்டியதாக ராசிபுரம் ராஜபிரபு(வயது 28), லால்குடி பெரியசாமி(38), பொள்ளாச்சி ரவிக்குமார்(37) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று பொள்ளாச்சி சிவலிங்கம்(55), ஈரோட்டை சேர்ந்த ஆனந்த்பாபு(28), யுவராஜ்(27), சேகர்(30), கரூர் கோவிந்தராஜ்(48), ஊட்டி ராமர்(26), திருப்பூர் வசந்தகுமார்(36), ராமநாதபுரம் முத்துராமலிங்கம்(40), திண்டுக்கல் இளங்கோவன்(48) நீலகிரி கண்ணன் (26) உள்பட 17 பேரை மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டோக்கன்

இதையடுத்து நேற்று மணல் லாரிகள் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அனைத்து லாரிகளுக்கும் முறையாக டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக திருக்காம்புலியூர் மணல் குவாரிக்கு அனுப்பப்பட்டு மணல் வழங்கப்பட்டது. இதனால் எந்தவித பிரச்சினையும் இன்றி நேற்று மணல் லாரிகள் இயங்கியது.


Next Story